உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வேலை உறுதி திட்டத்தை செயல்படுத்த அலட்சியம் ஏன்? பேரூராட்சிகளில் பாதிக்கும் தொழிலாளர்கள்

வேலை உறுதி திட்டத்தை செயல்படுத்த அலட்சியம் ஏன்? பேரூராட்சிகளில் பாதிக்கும் தொழிலாளர்கள்

உடுமலை; பேரூராட்சிகளில், வேலை உறுதித்திட்டத்தை தமிழக அரசு முழுமையாக செயல்படுத்தாமல் அலட்சியமாக இருப்பதால், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பின்றி பாதித்து வருகின்றனர். நிதி ஒதுக்கீடு செய்து திட்டத்தை முழுமையாக செயல்படுத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.திருப்பூர் மாவட்டம் உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதியில், விவசாயம் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. தற்போது ஊராட்சிகளில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இதன் வாயிலாக, விவசாய தொழிலாளர்கள், பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில்,தமிழக அரசு, கிராமப்புறங்களில் செயல்பாட்டிலுள்ள, தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை, பேரூராட்சி மற்றும் நகராட்சிகளில் செயல்படுத்த, அரசின் உயர் மட்ட குழுவை ஏற்படுத்தியது.இக்குழு பரிந்துரை அடிப்படையில், கடந்த, 2022ல், 37 பேரூராட்சிகளில் மட்டும், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.அந்த பேரூராட்சிகளில் மட்டும், தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடந்தது. அதே போல், நகர்ப்புற வேலை உறுதி திட்டத்தின் கீழ், தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.குறிப்பாக, விவசாயம் சார்ந்த பகுதிகளில் அமைந்துள்ள பேரூராட்சிகளிலும், இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. ஆனால், திட்டம் கிடப்பில் போடப்பட்டு, பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் பாதித்துள்ளனர்.ஏற்கனவே, தேர்வு செய்யப்பட்ட குமரலிங்கம் உள்ளிட்ட பேரூராட்சிகளிலும், பெயரளவுக்கு மட்டும் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், மடத்துக்குளம், குமரலிங்கம், சங்கராமநல்லுார், தளி, கணியூர் உள்ளிட்ட பல பேரூராட்சிகளில், விவசாயம் பிரதானமாக உள்ளது. ஆயிரக்கணக்கான விவசாய தொழிலாளர்கள், விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர்.இத்தொழிலாளர்கள் விவசாய சீசன் இல்லாத சமயங்களில், வேலைவாய்ப்பு கிடைக்காமல் வருவாய் இழந்து பாதித்து வருகின்றனர்.எனவே தமிழக அரசு அனைத்து பேரூராட்சிகளிலும், தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மற்றும் நகர்ப்புற வேலை உறுதி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.பேரூராட்சிகளில் வசிக்கும் தொழிலாளர்கள் சார்பில், திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கும், அரசுக்கும் பல முறை கோரிக்கை மனு அனுப்பினர். ஆனால், அரசு திட்டத்தை செயல்படுத்த அலட்சியம் காட்டி வருகிறது.

நிதி ஒதுக்கீடு இல்லை

இது குறித்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின், திருப்பூர் மாவட்ட செயலாளர் பஞ்சலிங்கம் கூறியதாவது: தமிழகத்திலுள்ள அனைத்து பேரூராட்சிகளிலும், பல்லாயிரக்கணக்கான விவசாய தொழிலாளர்கள் உள்ளனர்.அத்தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில், பேரூராட்சிகளில், முழுமையாக வேலை உறுதித்திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும் என பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம்.நிதி ஒதுக்கீடு இல்லாததால், திட்டம் முடங்கும் நிலையில் உள்ளது.பேரூராட்சி மற்றும் நகர்புறத்தில் வசிக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை