உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பொங்கல் வந்தும் மங்கும் சுண்ணாம்பு விற்பனை அரசின் உதவிக்கரம் கிடைக்குமா?

பொங்கல் வந்தும் மங்கும் சுண்ணாம்பு விற்பனை அரசின் உதவிக்கரம் கிடைக்குமா?

உடுமலை; தை திருநாளை வரவேற்க, வீடுகளில் வெள்ளை அடிக்கும் பழக்கம் கால சுழற்சியில், நவீன ரக வண்ண பூச்சுகளால் மாறிவிட்டதால், உடுமலை சுற்றுப்பகுதியில் சுண்ணாம்பு விற்பனை 'டல்' ஆகியுள்ளது.பொங்கல் திருவிழாவையொட்டி, ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே, கிராமங்களில், வீடுகளுக்கு வெள்ளை அடிப்பதும் விழாக்கோலமாய் நடக்கும். இப்போது, இத்தகைய காட்சிகளை, கிராமங்களிலும் தேடிப்பிடித்து பார்க்கும் நிலைதான் ஏற்பட்டுள்ளது.பொங்கல் திருநாளுக்கு குறுகிய நாட்கள் மட்டுமே இருப்பினும், உடுமலை சுற்றுப்பகுதியில் சுண்ணாம்பு விற்பனை மந்தமாகவே உள்ளது. உடுமலை, ஆலாம்பாளையம், மானுப்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில், பலரும் சுண்ணாம்பு உற்பத்தி தொழிலில் ஈடுபட்டனர்.இப்போது, ஓரிரு வீடுகளில் மட்டுமே இத்தொழில் செய்கின்றனர். பொள்ளாச்சி பகுதிகளிலிருந்து, ஓடை கற்கள் சரக்கு வாகனம் வாயிலாக இங்கு கொண்டு வருகின்றனர்.ஒரு, 'மினி லாரி' அளவில் கொண்டு வரப்படும் கற்கள், குறைந்தபட்சமாக, 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை விலை உள்ளது. 'மினி' சரக்கு வாகனம் அளவில், கொண்டுவரப்படும், நிலக்கரி, சராசரியாக 25 ஆயிரம் ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை விலைக்கு வாங்குகின்றனர்.கால்வாயில் ஒரு நாள் முழுவதும், நிலக்கரியை பயன்படுத்தி கற்களை எரியவிடுவதால், குறைந்த பட்சமாக ஐம்பது கிலோ வரை, சுண்ணாம்பு கிடைக்கிறது. பணியாளர்களுக்கான ஊதியம் மற்றும் சுண்ணாம்பு உற்பத்திக்கான போக்குவரத்து செலவுகளும் உள்ளது.காலத்துக்கு ஏற்ற ரகங்கள், வாஸ்துக்கேற்ப வண்ணங்கள் என மக்கள், நவீன வண்ணபூச்சுகளுக்கு மாறிவிட்டதால், பொங்கலுக்கு வீடுகளில் சுண்ணாம்பு வழக்கமும் குறைந்துவிட்டது.இதனால் பலரும் இத்தொழிலை கைவிட்டு, மாற்று பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சுண்ணாம்பு உற்பத்தியை மட்டுமே, வாழ்வாதாரமாக கொண்டுள்ள குடும்பங்களும், அரசின் உதவியை எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை