உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நகை கடனுக்கான காப்பீடு வசதி எல்லா வங்கிகளிலும் அமலாகுமா?

நகை கடனுக்கான காப்பீடு வசதி எல்லா வங்கிகளிலும் அமலாகுமா?

திருப்பூர்; 'வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில், தங்க நகைக்கடனுக்கு காப்பீட்டு வசதி செய்ய வேண்டும்' என, வாடிக்கையாளர்கள் எதிர்பார்க் கின்றனர். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்களில், தங்க நகைக்கடன் வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு, மிகக் குறைந்த வட்டியில் விவசாய நகைக்கடன் வழங்கப்படுகிறது. மற்ற கடன்களை போல நகைக்கடன் பெறும் போது, காப்பீடு வசதி இல்லை. சமீபமாக, சில வங்கிகள் மட்டும், வாடிக்கையாளருக்கு பாதுகாப்பு வழங்கும் காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளன. அதன்படி, 1 லட்சம் ரூபாய்க்கு, 66 ரூபாய் பிரிமியம் என்ற அடிப்படையில், புதிய காப்பீட்டு வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நகைக்கடன் பெறும் வாடிக்கையாளர் முழு காப்பீட்டு வசதியை பெற முடியும். காப்பீடு செய்த நகைக்கடன் பெற்ற வாடிக்கையாளர் இறக்க நேரிட்டால், அவர் நியமிக்கும் வாரிசுதாரர், எவ்வித பணத்தையும் செலுத்தாமல், எளிய நடைமுறையை பின்பற்றி, நகையை திரும்ப பெறும் வசதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து வங்கிகளிலும், இத்தகைய காப்பீட்டு வசதியை அறிமுகம் செய்ய வேண்டும் என, வாடிக்கையாளர் எதிர்பார்க்கின்றனர். திருப்பூர் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் துர்காபிரசாத்திடம் கேட்டபோது, ''நகைக்கடனுக்கு, காப்பீடு என்பது கட்டாயம் கிடையாது; இருப்பினும், வங்கிகள், தங்கள் வாடிக்கையாளர் வசதிக்காக, காப்பீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இதன் மூலம், மிகக்குறைந்த பிரிமியத்தில், முழு அளவில் காப்பீடு கிடைக்கிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !