விசாலமாகிறது நுாலகம் முழு நேரம் இயங்குமா?
திருப்பூர்,: திருமுருகன்பூண்டியில், கடந்த, 1965, மார்ச் 4ல், கிளை நுாலகம் திறக்கப்பட்டது. சுற்றுப்புறங்களில் உள்ள பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவியர், இந்நுாலகத்தை அதிகளவு பயன்படுத்த துவங்கியதால், வாசகர் எண்ணிக்கை உயர்ந்தது. 54 ஆண்டுகளை கடந்து, பொன்விழா கண்ட நுாலகமாக செயல்பட்டு வருகிறது.தற்போதைய நிலவரப்படி, நுாலகத்தில், 4,600 பேர் உறுப்பினர்கள் உள்ளனர். தினசரி, 100 பேர் வரை வாசகர்களாக வந்து புத்தகம், செய்தித்தாள் படித்து செல்கின்றனர்; 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன.போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதற்கு பயிற்சி பெறும் புத்தகங்களும் உள்ளன; 145 புரவலர்களும் உள்ளனர்.நுாலகத்தின் வளர்ச்சி மேம்பட்டு வரும் நிலையில், மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் கூடுதல் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது; கட்டுமானப்பணி முடியும் தருவாயில் உள்ளது. மாநில அரசின் சார்பிலும் நுாலக பயன்பாட்டுக்கு தேவையான பல்வேறு தளவாடப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.வாசகர்கள் கூறுகையில், ''இந்நுாலகம், காலை, 9:00 - 12:30 மணி, மாலை, 4:00 - 7:00 மணி வரை செயல்படுகிறது. இதனால், மதிய நேரங்களில் நுாலகத்துக்கு சென்று புத்தகங்களை படிக்க முடியாமல் ஏமாற்றமடைய வேண்டியுள்ளது.எனவே, காலை, 8:00 முதல், இரவு, 8:00 மணிவரை இயங்கும் முழுநேர நுாலகமாக மாற்றியமைக்க, மாவட்ட நுாலகத்துறை நடவடிக்கை எடுக்க வேண் டும்'' என்றனர்.