தீர்வை நோக்கி செல்லுமா மனுக்கள்; ஆவலுடன் எதிர்பார்க்கும் மக்கள்
திருப்பூர்; தங்கள் மனுக்கள் மீது உரிய பரிசீலனை செய்து, தீர்வு காணப்படும் என்கிற நம்பிக்கையோடு, குறைகேட்பு கூட்டத்தில், கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர். திருப்பூர் மாவட்ட அளவிலான பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்றது. கலெக்டர் மனிஷ் நாரணவரே , மக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். நேற்றைய குறைகேட்பு கூட்டத்தில் மக்களிடமிருந்து மொத்தம் 374 மனுக்கள் பெறப்பட்டன. பெற்றோர் மனு
அண்ணா நகர் பகுதி பெற்றோர்: எங்கள் குழந்தைகளை, ஆர்.டி.இ., திட்டத்தில், தனியார் பள்ளிகளில் சேர்த்து படிக்கவைத்து வருகிறோம். கடந்த 2024 -25ம் கல்வியாண்டு மற்றும் நடப்பு 2025-26 கல்வியாண்டுக்கான ஆர்.டி.இ., திட்ட கல்வி உதவித்தொகை அரசிடமிருந்து கிடைக்கவில்லை. இதனால், பள்ளிக்கு முழு கல்வி கட்டணத்தையும் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய எங்களால், முழு கல்வி கட்டணத்தை செலுத்த இயலாது. ஆர்.டி.இ., திட்ட தொகையை பள்ளிகளுக்கு உடனடியாக வழங்கி, மாணவர்கள் தடையின்றி பள்ளி படிப்பை தொடர அரசு கை கொடுக்கவேண்டும், என்றனர். பாதுகாப்பு கேள்விக்குறி
கே.செட்டிபாளையம் துவக்கப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்: கே.செட்டிபாளையம் தொடக்கப்பள்ளியில், 200 மாணவர்கள் படிக்கின்றனர். மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பதால், பள்ளியில் இட பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடம், தாராபுரம் பிரதான சாலையில் உள்ளதால், மாணவர் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. அரசு உயர்நிலை பள்ளி வளாகத்திலேயே, அதிக காலியிடம் உள்ளது. எனவே, உயர்நிலை பள்ளி வளாகத்திலேயே, துவக்கப்பள்ளிக்கான கூடுதல் வகுப்பறைகளை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். வியாபாரிகள் கண்ணீர்
பல்லடம் சாலையோர குறு வியாபாரிகள்: பல்லடம் என்.ஜி.ஆர்., ரோட்டில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக சாலையோரம் தள்ளுவண்டி கடை அமைத்து வியாபாரம் செய்துவருகிறோம். எங்களால் போக்குவரத்துக்கோ, பொதுமக்களுக்கோ இடையூறும் ஏற்படுவதில்லை. தள்ளுவண்டி கடைகள் நடத்த நகராட்சி, சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டையை, கடந்த 2015ல் வழங்கியது. தற்போது தள்ளுவண்டி கடை அமைக்க கூடாது என்கின்றனர். இதனால் எங்கள் குடும்ப வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. அதே பகுதியில், தொடர்ந்து தள்ளுவண்டி கடைகள் நடத்த அனுமதி அளிக்கவேண்டும். 'வழக்கு தொடரப்படும்'
நல்லுார் நுகர்வோர் நல மன்ற தலைவர் சண்முகசுந்தரம்: திருப்பூர் நகரில், தனியார் அரசு கேபிள், இணையதள கேபிள்களை, மின் கம்பங்களில் கட்டுகின்றனர். ஒரு கம்பத்தில், 30 கேபிள்கள் வரை கட்டப்படுகிறது. இதுதொடர்பாக, மின்வாரிய குறைகேட்பு கூட்டத்தில் தெரிவித்தும் எந்த பயனுமில்லை. இதனால் உயிரிழப்புகள் ஏற்பட்டால், அதற்கு மின்வாரிய அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டிவரும். மின் கம்பங்களில் கட்டப்பட்டுள்ள கேபிள்களுக்கு, உரிமையாளர்களிடமிருந்து வாடகை வசூலிக்க வேண்டும். இதுதொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காதபட்சத்தில், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். குடியேறும் போராட்டம்
ஊத்துக்குளி, காளிபாளையம் ஏ.டி.காலனி மக்கள்: காளிபாளையம் கிராமத்தில், 28 பேருக்கு, 18 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால், பாதை இல்லாததால், குடியேற முடியவில்லை. தொடர் போராட்டத்துக்குப்பின், ஆக. மாதம், வாரணாசிபாளையத்தில், தலா ஒன்றரை சென்ட் வீதம் பட்டா வழங்கப்பட்டது. ஆனால், சிலர், எங்களை குடியேற விடாமல் தடுக்கின்றனர். எங்கள் இடத்தை வருவாய்த்துறையினர் அளந்து கொடுக்கவேண்டும். இதுதொடர்பாக, இன்று (1ம் தேதி) வழங்கப்பட்ட இடத்தில் குடியேறும் போராட்டம் நடத்த உள்ளோம். பொருளாதார இழப்பு
உ.உ.க., மாவட்ட செயலாளர் முத்துரத்தினம்: திருப்பூர் மாவட்டத்தில், தனியார் விதை நெல் உற்பத்தி நிறுவனங்களில் முறைகேடுகள் நடக்கின்றன. இதுகுறித்து விசாரணை அலுவலராக, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) நியமிக்கப்பட்டு ஒருமாதமாகிறது. ஆனால், விசாரணை நடத்தாததால், தரமற்ற விதை நெல் விற்பனை தொடர்கிறது. இதனால், மகசூல் பாதிப்பு ஏற்பட்டு, எங்களுக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்படும். விதை நெல் உற்பத்தி நிறுவனங்களில் உடனடியாக ஆய்வு நடத்தவேண்டும்.