டி20 வேகத்தில் வசமான வெற்றி டெஸ்ட் போட்டி மீதான ஆர்வம் கூடுமா?
உ.பி., மாநிலம், கான்பூர், கிரீன்பார்க் மைதானத்தில், வங்கதேச அணியுடனான டெஸ்ட் போட்டியில், வாண வேடிக்கை நிகழ்த்தியது நம் தேச அணி. குறிப்பாக, மூன்றே ஓவரில், 51 ரன், 10.1 ஓவரில், 100 ரன், 24.1 ஓவரில், 200 என அடுத்தடுத்த ரன் வேட்டை நிகழ்ச்சி, முதல் இன்னிங்ஸில், ஒன்பது விக்கெட் இழப்புக்கு, 285 ரன் எடுத்தது. அசத்தலான ஆட்டத்தால், சாதனைகள் குவிந்தன. வெற்றியும் இந்தியா வசமானது. டெஸ்ட் போட்டி என்றாலே நிதான ஆட்டம் என்ற வரையறை தாண்டி, டி20 போல் அமைந்து விட்டது. இந்த போட்டி குறித்த கிரிக்கெட் ஆர்வலர்கள் கருத்துகள்:இது பெரிய வெற்றியல்லராஜன், உடற்கல்வி ஆசிரியர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஊத்துக்குளி:டெஸ்ட் போட்டி என்றாலே, ஐந்து நாள் விளையாட வேண்டும்; ரன் குவிப்பு என்பது இமாலய இலக்காக இருக்கும். ஒரு பேட்ஸ்மேன் மூன்று நாள், நான்கு நாள் நின்று விளையாடி, முச்சதம் வரை அடித்த சாதனைகளை எல்லாம் இந்திய அணி படைத்துள்ளது. டெஸ்ட் போட்டி அவ்வாறு இருந்தால் பலரும் ரசிப்பர்; டெஸ்ட் மீதான ஆர்வம் அடுத்த தலைமுறை கிரிக்கெட் ஆர்வலர் மத்தியில் அதிகரிக்கும்.கான்பூரில் வங்கதேசத்துடன் இந்திய அணி விளையாடிய போட்டி 'டி - 20' போல் இருந்ததால், இதை ஒரு பெரிய வெற்றியாக கருத முடியாது. சாதனைகள் பல படைத்த அணிகளுக்கு வாழ்த்து தெரிவித்தாலும், இது டெஸ்ட் போட்டி மீதான எதிர்பார்ப்பை குறைக்கும் விதமாக அமைந்து விடும்.புதுமை புகுத்த வேண்டும்சரவணன், பயிற்சியாளர், ஸ்டேடியம் கிரிக்கெட் அகாடமி:கடந்த காலங்களில் டெஸ்ட் போட்டி என்றாலே டிராதான் அதிகம். கடந்த, 2018க்கு பின் தான், டெஸ்ட் போட்டி முடிவுகளே வெற்றி, தோல்வியென தெரிய வந்துள்ளது. அதற்கு காரணம், டி20 போட்டிகள்தான். தற்போது, போட்டி முடிவுகள், 95 சதவீதம் எளிதில் கிடைத்து விடுகிறது. குறிப்பாக, இந்தியா அணி விளையாடும் போட்டி முடிவுகள் மூன்றாவது நாளே தெரிந்து விடுகிறது. நம் வீரர்களின் ஆட்டம், பவுலிங் மெருகேற்றப்பட்டுள்ளது.முதல் நாள் போட்டியில், 250 ரன் எடுப்பதே கஷ்டமாக இருந்தது. தற்போது, 350-ஐ தாண்டி விடுகின்றனர். மிடில் ஆர்டர், ஏழு மற்றும் எட்டாவது வீரர் வரை விளையாடுவதால், டெஸ்ட் ரன் குவிப்பு அதிகமாகிறது. ரன் ரேட்டுக்கு ஏற்ப, எடுக்க போகும் ஸ்கோர் விபரம் தெரிந்து விடுகிறது. பயிற்சியாளர் இன்னமும் புதுமைகளை புகுத்தினால் மேலும் இந்திய அணி சாதிக்க வாய்ப்புள்ளது. டெஸ்ட் மீதான ஆர்வம் அவ்வளவு எளிதில் குறைந்து விடாது.காம்பீர் சிறந்த முன்னெடுப்புதங்கவேலு, ஆர்.வி., கிரிக்கெட் அகாடமி:இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் கவுதம் காம்பீர். அவர் முழுத்திறமை காட்டி, நல்ல பெயர் பெற வேண்டும். அதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர். காம்பீரின் பேட்டிங் மிக சிறப்பாக இருக்கும். அதை அப்படியே போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் காண்பித்துள்ளனர்.ரசிகர்கள், டி - 20 போட்டியை பார்த்து பழகியதால், வங்கதேச டெஸ்ட் தொடரும் பார்த்து ரசிக்கும் வகையில் அதிரடியாக அமைந்து விட்டது. டெஸ்ட் போட்டியை ரசித்து பார்ப்போருக்கு கான்பூர் டெஸ்ட் ஒரு ஏமாற்றம் தான். சில நாட்கள் இந்த சாதனை விவாத பொருளாக இருக்கும். பின் அடுத்த போட்டி வந்து விடும். அவ்வளவும் மறந்து விடும்; அது தான் கிரிக்கெட்.