வடகிழக்கு பருவமழைக்கு முன் ஓடைகள் துார்வாரப்படுமா-?
உடுமலை; உடுமலை நகராட்சி பகுதியில், மழை வெள்ள நீர் வெளியேற இயற்கையாக அமைந்துள்ள ஓடைகளை வட கிழக்கு பருவ மழைக்கு முன் துார்வார வேண்டும். உடுமலை நகராட்சியில், தங்கம்மாள் ஓடை, கழுத்தறுத்தான் பள்ளம், நாராயணன் காலனி ஓடை, நெடுஞ்செழியன் காலனி ஓடை, ராஜவாய்க்கால் பள்ளம் என, 10 கி.மீ., துாரம் இயற்கை நீர் வழித்தடங்களாக உள்ளன. மழைக்காலங்களில் எளிதாக, வெள்ள நீர் வெளியேறும் வகையில் இருந்த ஓடைகள் மீதான அலட்சியம் காரணமாக, ஆக்கிரமிப்புகளால் குறுகியும், சாக்கடை கழிவு நீர் வெளியேற்றும் கால்வாயாகவும், குப்பை கொட்டும் மையமாகவும் மாற்றப்பட்டுள்ளது. தற்போது, இயற்கையாக அமைந்துள்ள இந்த நீர் வழித்தடங்கள் முழுவதும் மண் மூடியும், மரம், செடிகள் முளைத்து புதர் மண்டியும், பிளாஸ்டிக் உள்ளிட்ட திடக்கழிவுகள் தேங்கியும் காணப்படுகிறது. இதனால், மழை காலங்களில், ஓடைகளில் வெள்ள நீர் செல்ல வழியின்றி, குடியிருப்புகளுக்குள் புகுந்து பெரும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, வட கிழக்கு பருவ மழை துவங்க உள்ள நிலையில், ஓடைகளை முழுமையாக துார்வாரி, கழிவுகளை அகற்றி, மழை நீர் எளிதாக வெளியேற வழி ஏற்படுத்த வேண்டும். இதுகுறித்து, நகராட்சியினர், பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.