குடும்பத்துக்கு கொலை மிரட்டல்; நிறுவன உரிமையாளர் மீது பெண் புகார்
திருப்பூர்; குடும்பத்தை கொலை செய்து விடுவதாக மிரட்டும் பனியன் நிறுவன உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பாதிக்கப்பட்ட பெண் திருப்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.இதுகுறித்து திருப்பூர் வளையங்காட்டை சேர்ந்த கோமதி, 35 என்பவர் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் மனு:எனது கணவர் தயாளன், 40. குமார் நகரில் உள்ள பனியன் நிறுவனம் ஒன்றில் கடந்த, நான்கு ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். கடந்த, 3ம் தேதி நிறுவனத்தின் உரிமையாளர், எனது கணவர், நிறுவனத்தில் உள்ள பனியன் ரோலை எடுத்து விற்று உள்ளதாக கூறி, அது குறித்து விசாரிக்க வேண்டும் என அழைத்தார்.நானும், எனது கணவரும் அங்கு சென்ற போது, 40 லட்சம் மதிப்பிலான பனியன் ரோல்களை நிறுவனத்துக்கு தெரியாமல் எடுத்து விட்டதாக கூறினார்.என் கண் முன்னே, கணவரை தாக்கினார். நஷ்ட ஈடாக, மாமியார் பெயரில் உள்ள இடத்தை எழுதி வாங்கி கொண்டனர். தொடர்ந்து, எங்களை விடாமல் மிரட்டல் விடுத்து வருகின்றனர். கொலை செய்து விடுவோம் என்று மிரட்டுகின்றனர்.மன உளைச்சல் காரணமாக, கணவர் தற்கொலைக்கு முயன்று, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சம்பந்தப்பட் பனியன் நிறுவன உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார். ரூ.15 லட்சம் 'அபேஸ்'பெண் குற்றச்சாட்டு
இதேபோல, திருப்பூர் - முருகானந்தபுரத்தை சேர்ந்த நேத்ராவதி, 40 என்ற பெண் நேற்று கமிஷனர் ஆபீசில் புகார் மனு கொடுத்தார். அதில், 'கடந்த, 17 ஆண்டுகளாக திருப்பூர் வசித்து வருகிறேன்.எனது கணவர் உடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பத்து ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகிறோம். தற்போது, காந்தி நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் போது, வினோத் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, என்னிடம் பழகி, 15 லட்சம் ரூபாயை பணமாகவும், நகையாகவும் பெற்று சென்றார். ஆனால், திருமணம் செய்யாமல் ஏமாற்றி விட்டார்.இதுதொடர்பாக பலமுறை புகார் கொடுத்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை,' என்று கூறியுள்ளார்.