மேலும் செய்திகள்
உரிமைத்தொகைக்கு 10,897 விண்ணப்பங்கள்
21-Jul-2025
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் இன்று துவக்கம்
15-Jul-2025
திருப்பூர்,; திருப்பூர் மாவட்டத்தில், நான்கு கட்டங்களாக 325 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, 120 முகாம்கள் நடத்தப்பட உள்ளன. கடந்த 15ம் தேதி முதல் 18ம் தேதி வரையிலான நான்கு நாட்களில், மொத்தம் 24 முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் அரசு விழா, திருப்பூரில் நடப்பதாக இருந்து ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்றுமுதல் மீண்டும், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்கள் துவக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் நேற்று, திருப்பூர், அவிநாசி, ஊத்துக்குளி, பல்லடம் பகுதிகளில், மொத்தம் ஆறு முகாம்கள் நடைபெற்றன. திருப்பூர் மாநகராட்சியின் 33, 34, 35 வார்டுகளுக்கான முகாம், சென்னியப்பா நகர், சண்முக தேவர் முத்தம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அமைச்சர் சாமிநாதன், துவக்கி வைத்தார். எம்.எல்.ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார், ஆர்.டி.ஓ., மோகனசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். காலை முதல் மதியம், 3:00 மணி வரை நடைபெற்ற முகாமில், மூன்று வார்டு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று, பட்டா மாறுதல், உட்பிரிவு, புதிய மின், குடிநீர் இணைப்பு, சொத்து வரி விதிப்பு உள்பட பல்வேறு தேவைகளுக்கு மனு அளித்தனர். மொத்தம் 16 கவுன்டர்களில் விண்ணப்பம் பதிவு நடைபெற்றது. இரண்டு மையங்களில் ஆதார் பதிவு; மூன்று மையங்களில் இ-சேவை இயக்கப்பட்டது. சுகாதாரத்துறை சார்பில், சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட்டு, தேவையானோருக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டன. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், இலவச ஸ்கூட்டர் மற்றும் உதவி உபகரணங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டது. வாக்குவாதம் முகாமில், மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் பதிவுக்கு சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்பட்டிருந்தது. மற்ற துறைகளை விட, உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க, பெண்கள் கூட்டம் அலைமோதியது. ஆதார் பதிவு, இ-சேவை, விண்ணப்பம் பதிவு ஆகியவை, திருமண மண்டபத்தினுள் நடைபெற்றன. முகாமுக்கு வந்த ஆண், பெண் உள்பட பொதுமக்கள், கையில் விண்ணப்பத்தோடு திருமண மண்டபத்தினுள் நுழைய முயன்றனர். மக்களை, போலீசாரும், முகாம் பணி அலுவலர்களும் தடுத்து நிறுத்தி, இரும்பு கேட்டை இழுத்து மூடினர். இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள், முகாமுக்கு அழைத்துவிட்டு, கதவை இழுத்து மூடலாமா என கேள்விகேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், போலீசார், கேட்டை திறந்து, அனைவரையும் உள்ளே செல்ல அனுமதித்தனர். 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம், அரசு நிகழ்ச்சி. மண்ணரையில் நடைபெற்ற முகாமை, தி.மு.க., வினர் தங்கள் கட்சி சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சி போல் தோன்றும் வகையிலேயே நடத்தினர். கருமாரம்பாளையம் முதல் முகாம் நடைபெற்ற மண்டபம் வரை ஒரு கி.மீ., துாரத்துக்கு, ரோட்டின் இருபுறமும் உயரமான தி.மு.க., கொடிகள் நடப்பட்டிருந்தன. திருப்பூர் - ஊத்துக்குளி ரோட்டிலிருந்து, மண்டபத்துக்கு செல்லும் வழியில், 'முகாம் நடைபெறும் மண்டபத்துக்கு செல்லும் வழி' என குறிப்பிடப்பட்டிருந்த வழிகாட்டி பேனரிலும், கட்சி நிர்வாகிகளின் பெயர், கருப்பு, சிவப்பு வண்ணத்தில் எழுதப்பட்டிருந்தது குறிப்படத்தக்கது.
21-Jul-2025
15-Jul-2025