கஞ்சா வியாபாரியை கொன்ற 16 பேர் சிக்கினர்
செய்யாறு: கஞ்சா தகராறில், வெல்டிங் தொழிலாளியை கொலை செய்த, சிறுவர்கள் உட்பட 16 பேரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறை சேர்ந்தவர் அப்சல், 22; வெல்டிங் பட்டறை தொழி லாளி. இவர் சட்ட விரோத மாக கஞ்சா விற்பனையும் செய்து வந்தார். பெருங்கட்டூர் ரமணா, 23, என்பவர் அப்சலிடம், 20,000 ரூபாய் கொடுத்து கஞ்சா வாங்கி தர கூறியுள்ளார். பணத்தை பெற்ற அவர், கஞ்சா கொடுக்காமல் ஏமாற்றி வந்தார் என கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் முன்விரோதம் இருந்தது. ரமணாவை கொலை செய்ய அப்சல் தன் நண்பர்கள், நான்கு பேரை தயார் நிலையில் வைத்திருந்தார். இது, ரமணாவுக்கு தெரியவே, அப்சலை கொலை செய்ய முடிவு செய்தார். கடந்த மாதம், 21-ம் தேதி, கஞ்சா மற்றும் மது போதையில் இருந்த அப்சலை, ரமணா மற்றும் அவரது நண்பர்கள், 16 பேர் சேர்ந்து கத்தியால் குத்தியும், கழுத்தை அறுத்தும், கை, கால்களை உடைத்தும் கொலை செய்தனர். உடலை குழி தோண்டி புதைத்தனர். கொலை தொடர்பாக செய்யாறு தனிப்படை போலீசார், ரமணா உள்ளிட்ட 16 பேரை நேற்று கைது செய்தனர்.