ரேஷன் கார்டுக்கு ரூ.3,000 லஞ்சம்; வட்ட வழங்கல் அலுவலர் கைது
சேத்துப்பட்டு: சேத்துப்பட்டில், புதிய ரேஷன் கார்டு வழங்க, 3,000 ரூபாய் லஞ்சம் பெற்ற, வட்ட வழங்கல் அலுவலரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த தேவிகாபுரத்தை சேர்ந்தவர் அருண்குமார், 35. இவர், புதிய ரேஷன் கார்டு வேண்டி, கடந்த, 2024 செப்., 3ல் ஆன்லைனில் விண்ணப்பித்தார். கடந்த, 4ல், சேத்துப்பட்டு வட்ட வழங்கல் அலுவலர் சுமதியை சந்தித்து, புதிய ரேஷன் கார்டு வழங்க கேட்டார். அதற்கு அவர், 3,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத அருண்குமார், திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் கூறியபடி நேற்று, தாலுகா அலுவலகத்தில் இருந்த, வழங்கல் அலுவலர் சுமதியிடம், போலீசார் ரசாயனம் தடவி கொடுத்தனுப்பிய, 3,000 ரூபாயை அருண்குமார் கொடுத்தார். அப்போது, லஞ்ச ஒழிப்பு போலீசார், சுமதியை கைது செய்தனர்.