ஸ்கூட்டி மீது மரம் விழுந்து ஸ்ரீரங்கம் தம்பதி பலி
திருச்சி ; ஸ்கூட்டி மீது மரக்கிளை விழுந்த விபத்தில், தம்பதி பரிதாபமாக உயிரிழந்தனர்.திருச்சி, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர் சுதர்சன், 37; தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி புனிதா, 30. இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். சில மாதங்களுக்கு முன், லால்குடியில் புதிதாக வீடு கட்டி, சுதர்சன் தன் குடும்பத்துடன் அங்கு வசித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை தன் மனைவியுடன், ஸ்கூட்டியில் ஸ்ரீரங்கம் செல்ல புறப்பட்டார். மேலவாளாடி அருகே வந்தபோது, சாலையோரம் இருந்த மரம் முறிந்து சாலையில் விழுந்தது. இதில், மரத்தின் கிளைகள் ஸ்கூட்டி மீது விழுந்ததில், சுதர்சன், புனிதா படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே இறந்தனர். சமயபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.