தொடரும் ஆப்பரேஷன் அகழி நேற்றும் 27 பத்திரங்கள் மீட்பு
திருச்சி:திருச்சி, புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி.,க்கள் வருண்குமார், வந்திதா பாண்டே ஒருங்கிணைந்து, 'ஆப்பரேஷன் அகழி' என்ற பெயரில் நில அகபரிப்பு, கட்டப்பஞ்சாயத்து செய் வோரை வேட்டையாடி வருகின்றனர். முதல்கட்டமாக, 19ம் தேதி மாலை, பட்டறை சுரேஷ், சந்திரமவுலி, குருமூர்த்தி, கிருஷ்ணன் என, 14 பேர் வீடு, தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி, பல கோடி ரூபாய் மதிப்புள்ள, 258 நிலம் மற்றும் சொத்து ஆவணங்கள், 82 நிரப்பப்படாத காசோலைகள், பிற ஆவணங்களை கைப்பற்றினர். அன்று இரவு, காரில் ஆயுதங்களுடன் தப்பிய சந்திரமவுலியை, முக்கொம்பு பகுதியில் வாத்தலை போலீசார் கைது செய்தனர்.கடந்த, 21ம் தேதி, சுரேஷின் வீடு மற்றும் மாட்டுக் கொட்டகையில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த ராமதாஸ், குமார் ஆகியோரை கைது செய்த தனிப்படை போலீசார், கடந்த, 23ம் தேதி, புதுச்சேரியில் இருந்த சுரேஷையும் கைது செய்தனர்.ஜெயசீலன் என்பவர் கொடுத்த புகாரின்படி, கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு, நிலங்களை அபகரித்த கொட்டப்பட்டு செந்தில், கே.கே.நகரைச் சேர்ந்த அண்ணாமலை ஆகியோர் மீது தனிப்படை போலீசார் வழக்கு பதிந்தனர். இதில், போலீசாரால் கைது செய்யப்பட்ட செந்தில் தப்பி ஓடிய போது, கால் முறிவு ஏற்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தப்பிய அண்ணாமலையை தேடி வருகின்றனர்.நேற்று சாத்தனுாரில்உள்ள அண்ணாமலையின் அலுவலகம், அவரதுபினாமி ராஜ்குமார், கே.கே.நகரில் உள்ள உறவினர் மீனாட்சி ஆகியோரது வீடு மற்றும் அலுவலகங்களிலும் தனிப்படை போலீசார் சோதனை நடத்தினர். இதில், ராஜ்குமார் வீட்டில் அவருக்கு சம்பந்தம் இல்லாத 17 பத்திரங்களும், மீனாட்சி வீட்டில் 10 பத்திரங்களும், கணக்கில் வராத, 18 லட்சத்து, 92,750 ரூபாய், 70 சவரன் நகைகளை கைப்பற்றிய போலீசார், வருமான வரித்துறையினரிடம் அவற்றை ஒப்படைத்தனர்.