உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / மணப்பாறை மாணவிக்கு பாலியல் தொல்லை பள்ளி நிர்வாகிகள் 5 பேர் போக்சோவில் கைது

மணப்பாறை மாணவிக்கு பாலியல் தொல்லை பள்ளி நிர்வாகிகள் 5 பேர் போக்சோவில் கைது

திருச்சி,:மணப்பாறை தனியார் பள்ளியில், நான்காம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை வழக்கில், பள்ளி நிர்வாகிகள், தாளாளர், தலைமை ஆசிரியை உட்பட ஐந்து பேரை போக்சோவில் போலீசார் கைது செய்துள்ளனர்.திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மணப்பாறைபட்டி என்ற இடத்தில் குரு வித்யாலயா என்ற சி.பி.எஸ்.இ., பள்ளியில், 4ம் வகுப்பு படிக்கும் 9 வயது மாணவிக்கு, பள்ளி தாளாளர் சுதாவின் கணவர் வசந்தகுமார், 54, பாலியல் தொல்லை கொடுத்துஉள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி பெற்றோரிடம் தெரிவிக்க, பள்ளி கண்காணிப்பு கேமரா பதிவு வாயிலாக வசந்தகுமார், மாணவியிடம் தவறாக நடந்தது உறுதி செய்யப்பட்டது.

வழக்கு பதிவு

இதையடுத்து, பள்ளியில் இருந்த வசந்தகுமாரை, மாணவியின் குடும்பத்தார் அடித்து, உதைத்து போலீசில் ஒப்படைத்தனர். மேலும், பள்ளியை சூறையாடினர். மாணவியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், திண்டுக்கல் - திருச்சி சாலையில், நொச்சிமேடு அருகே மறியலில் ஈடுபட்டனர். ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருச்சி டி.ஐ.ஜி., வருண்குமார், எஸ்.பி., செல்வநாகரத்தினம் தலைமையிலான போலீசார் லேசான தடியடி நடத்தி, மறியலை கலைத்தனர். பாதிக்கப்பட்ட மாணவி குடும்பத்தாரின் கோரிக்கையை ஏற்று, வசந்தகுமார், அவரது மனைவியான பள்ளி தாளாளர் சுதா, பள்ளி நிர்வாகிகள் இளஞ்செழியன், மாராச்சி, தலைமை ஆசிரியை ஜெயலட்சுமி ஆகியோர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, ஜெயலட்சுமி தவிர, மற்ற நால்வரையும் கைது செய்தனர்.

மேலும் ஒரு மாணவி

நேற்று காலை, ஜெயலட்சுமி மணப்பாறை அனைத்து மகளிர் போலீசில் சரணடைந்தார். இந்நிலையில், நேற்று பள்ளியில் விசாரணைக்கு வந்த, திருச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலக்குழு தலைவர் ராஜிவ்காந்தியிடம், 5ம் வகுப்பு மாணவி ஒருவர், தானும் வசந்தகுமாரால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டதாக புகார் அளித்தார்.அதுகுறித்து விசாரணை நடத்தப்படுகிறது. மேலும், மாவட்ட மெட்ரிக்., பள்ளிகள் கல்வி அலுவலர் பேபி, பள்ளி ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் மணப்பாறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இதற்கிடையே, கைதான அனைவரும், திருச்சி மாவட்ட மகிளா நீதிமன்றத்தில், நேற்று இரவு ஆஜர்படுத்தப்பட்டனர்.

நிபந்தனை ஜாமின்

விசாரித்த நீதிபதி ஸ்ரீவட்சன், வசந்தகுமாரை, 21ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். சுதா, மாராச்சி, இளஞ்செழியன், ஜெயலட்சுமி ஆகியோருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கினார்.இந்நிலையில், அதே பள்ளியில், 5ம் வகுப்பு மாணவிக்கும், வசந்தகுமார் பாலியல் தொல்லை கொடுத்தாக தரப்பட்ட புகாரில், இதே ஐந்து பேர் மீது போலீசார் மேலும் ஒரு போக்சோ வழக்கு பதிவு செய்துஉள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை