கூட்டுறவு சங்கத்தில் நகை கையாடல் கடிதம் எழுதி எழுத்தர் தற்கொலை
திருச்சி:தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், நகைகள் கையாடல் தொடர்பாக எழுந்த பிரச்னையில், முதுநிலை எழுத்தர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே நடராஜபுரத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இங்கு கூத்தைப்பாரை பத்மாவதி செயலராகவும், பூலாங்குடி கிருத்திகா நகை மதிப்பீட்டாளராகவும், அரசங்குடி சாமிநாதன் முதுநிலை எழுத்தராகவும், நடராஜபுரம் ராமதாஸ் அலுவலக உதவியாளராகவும் பணியாற்றி வருகின்றனர். சங்கத்தில், அப்பகுதி மக்கள், விவசாயிகள் நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றனர். ஜூன் 30ம் தேதி, நடராஜபுரத்தை சேர்ந்த ஒருவர் நகையை மீட்க கடன் சங்கத்துக்கு வந்துள்ளார். அவரது நகையை சரிபார்த்ததில், இரண்டரை சவரன் குறைவாக இருந்தது.இந்த தகவல் அப்பகுதியில் பரவியதை தொடர்ந்து, நகை அடமானம் வைத்த பலரும் அடகு நகையை சரி பார்த்தனர். இதில், 196 கிராம் நகை கையாடல் நடந்திருப்பதாக புகார் எழுந்தது. கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில், நேற்று காலை பணிக்கு வந்த முதுநிலை எழுத்தர் சாமிநாதன், சிறிது நேரத்தில் வெளியே சென்றுள்ளார். மதியம் தோகூர் அருகே, கல்லணை கால்வாய் தென்கரை கருவக்கொல்லையில் வேப்பமரத்தில் துாக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். தோகூர் போலீசார், சாமிநாதன் எழுதிய கடிதங்களை கைப்பற்றினர்.அதில், தன்மீது சக ஊழியர்கள் வீண்பழி சுமத்துவதாக பெயருடன் குறிப்பிட்டிருந்தார்.