விமானத்தின் அவசர வழியை திறந்த டாக்டரிடம் விசாரணை
திருச்சி:திருச்சியில் இருந்து சென்னை செல்ல இருந்த விமானத்தின் அவசர வழி கதவை திறந்த டாக்டரிடம் போலீசார் விசாரிக்கின்றனர். திருச்சி, உய்யக்கொண்டான் திருமலையை சேர்ந்தவர் டாக்டர் அருண்பிரசாத், 34; திருச்சி எஸ்.ஆர்.எம்., மருத்துவமனை அறுவை சிகிச்சை நிபுணர். நேற்று காலை, திருச்சியில் இருந்து சென்னை செல்ல, இண்டிகோ விமானத்தில் டிக்கெட் பதிவு செய்திருந்தார். காலை, 7.15 மணிக்கு விமானத்தில் ஏறி அமர்ந்த டாக்டர், தன் இருக்கை அருகே இருந்த அவசர வழி கதவை திறந்து விட்டார். இதைப்பார்த்த விமான ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து, அவர்கள் இண்டிகோ நிறுவன அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க, அவர்கள் திருச்சி விமான நிலைய போலீசாரிடம் புகார் அளித்தனர். போலீசார், டாக்டர் அருண் பிரசாத்திடம் விசாரிக்கின்றனர்.