ரூ.10 கோடி போதைப்பொருள் திருச்சி ஏர்போர்ட்டில் பறிமுதல்
திருச்சி:திருச்சி விமான நிலையத்தில், இலங்கையில் இருந்து வந்த விமான பயணியிடம், 10 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து கொழும்பு வழியாக, திருச்சி விமான நிலையத்திற்கு, நேற்று முன்தினம் இரவு, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. அதில், போதைப்பொருள் கடத்தப்படுவதாக, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.அவர்கள் கொடுத்த தகவல்படி, திருச்சி விமான நிலையத்திற்கு வந்த விமான பயணியரிடம், வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில், பயணி ஒருவர், 'ஹைட்ரோ போனிக்' முறையில் வளர்த்த 9.900 கிலோ கஞ்சாவை, உடைமையில் மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு, 10 கோடி ரூபாய். போதைப்பொருளை பறிமுதல் செய்த போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், பயணியை கைது செய்து விசாரிக்கின்றனர்.