உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / பஞ்சாமிர்தத்தில் ஆண்மை குறைவு மருந்து சேர்ப்பு: அவதுாறு பரப்பிய சினிமா இயக்குனர் கைது

பஞ்சாமிர்தத்தில் ஆண்மை குறைவு மருந்து சேர்ப்பு: அவதுாறு பரப்பிய சினிமா இயக்குனர் கைது

திருச்சி:பழனி பஞ்சாமிர்தத்தில், ஆண்மை குறைவு மருந்து கலப்பதாக கூறி, அவதுாறு பரப்பியதாக, சினிமா பட இயக்குனர் மோகனை, திருச்சி தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். திரவுபதி, ருத்ர தாண்டவம், பகாசுரன் ஆகிய சினிமா படங்களை இயக்கிய மோகன், தனியார் 'டிவி' சேனலுக்கு, ஹிந்துக்கள் இளிச்சவாயர்களா என்ற தலைப்பில் அளித்த பேட்டி, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் பேட்டியளித்த அவர், 'பழனி கோவில் பிரசாதமான பஞ்சாமிர்தத்தில், ஆண்மைக் குறைவு ஏற்படுத்தும் மாத்திரை கலக்கப்பட்டதாகவும், அதை வெளியே தெரியாமல் அழித்து விட்டதாகவும், அங்கு பணி செய்தவர்கள் தெரிவித்தனர்' என்றார்.அவரது கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி, சர்ச்சையை ஏற்படுத்தியது.பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதுாறு பரப்பியதாக, திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவில் மேலாளர் கவியரசு அளித்த புகார்படி, சமயபுரம் போலீசார், ஐந்து பிரிவுகளில் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.பழநி உள்ளிட்ட பல பகுதிகளிலும், இதே பிரச்னைக்காக மோகன் மீது போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. திருச்சி மாவட்ட எஸ்.பி., வருண்குமார் உத்தரவின்படி, சென்னை, ராயபுரத்தில் தங்கி இருந்த இயக்குனர் மோகனை, தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். பின், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

பா.ஜ., நிர்வாகி மீதும் வழக்கு

பழநி முருகன் கோவில், பிரசாதமான பஞ்சாமிர்தம் தயாரிக்க வழங்கப்படும் நெய் தரம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவின. பஞ்சாமிர்தம் தயாரிப்புக்கு நெய் ஆவின் நிறுவனத்தில் இருந்து பெறப்படுகிறது. பஞ்சாமிர்தம் குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.இந்நிலையில் பா.ஜ., தொழிலாளர் அணி மாநில துணைத்தலைவர் செல்வகுமார், பஞ்சாமிர்தம் குறித்து அவதுாறு தகவல் பரப்பியதாக போலீசில் பழநி கோவில் நிர்வாகத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அவர் மீது வழக்கு பதிந்து பழநி அடிவாரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை