திருமண ஆல்பம் தர இழுத்தடிப்பு ஸ்டூடியோகாரருக்கு அபராதம் விதிப்பு
திருச்சி:திருமண ஆல்பம் தராத ஸ்டூடியோ உரிமையாளருக்கு, திருச்சி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், 1.25 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.திருச்சியில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் ஆய்வு படிப்பு படித்தவர் அக்னிஹோத்ரி, 29, என்ற மாணவி. இவர், உத்தர பிரதேச மாநிலம், கான்பூரில், 2021ல் நடந்த திருமண நிகழ்ச்சியை வீடியோ மற்றும் போட்டோ எடுத்து, ஆல்பம் தயாரிக்க விரும்பினார்.இதற்காக, கான்பூரை சேர்ந்த ஸ்டூடியோ உரிமையாளர் ரவி சிங்குக்கு ஆர்டர் கொடுத்தார். அதற்காக, திருச்சியில் இருந்து 33,600 ரூபாய் முன்பணம் செலுத்தியிருந்தார். திருமணம் முடிந்து ஓராண்டு ஆகியும் ஆல்பம் தயாரித்து தராமல் ரவிசிங் இழுத்தடித்தார்.இதனால், மன உளைச்சலுக்கு ஆளான அக்னிஹோத்ரி, திருச்சி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், 2022ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஆணையம், மனுதாரருக்கு உடனடியாக ஆல்பத்தை கொடுக்க வேண்டும் என, ரவி சிங்குக்கு உத்தரவிட்டது. இதையறிந்த ஸ்டூடியோ உரிமையாளரான ரவிசிங், மனுதாரருக்கு மிரட்டல் விடுத்தார்.மனுதாரர் தரப்பில் திருச்சி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தலைவர் காந்தி தலைமையிலான குழுவினர், மனுதாரருக்கு மிரட்டல் விடுத்தது 1.25 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.அந்த உத்தரவையும் ரவி சிங் மதிக்காததால், அவரை கைது செய்து, நுகர்வோர் ஆணையத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டது. அதன்படி, போலீசார் உத்தர பிரதேசத்தில் இருந்த ரவி சிங்கை பிடித்து விசாரித்தனர்.வழக்கை சுமூகமாக முடிப்பதாக, ஒப்புக்கொண்ட ரவி சிங், ஆணைய உத்தரவின்படி, 1.25 லட்சம் ரூபாய் ஆணையத்தில் செலுத்தி வழக்கை முடித்துக் கொண்டார்.