உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / சொத்துக்குவிப்பில் சிக்கிய உணவு பாதுகாப்பு அலுவலர்

சொத்துக்குவிப்பில் சிக்கிய உணவு பாதுகாப்பு அலுவலர்

திருச்சி:திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலராக இருப்பவர் டாக்டர் ரமேஷ்பாபு. இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக, திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல்கள் சென்றன. அதன்படி, லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரசன்ன வெங்கடேஷ் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது.விசாரணையில் கடந்த, 2018ம் ஆண்டு வரை, டாக்டர் ரமேஷ்பாபு மற்றும் அவரது மனைவி பெயரில் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு, 18.64 லட்சம் ரூபாயாக இருந்தது. பின் 2018 முதல் 2021 காலகட்டத்தில், டாக்டர் ரமேஷ்பாபு சொத்து மதிப்பு, 2.36 கோடி ரூபாய். அவரது வருவாய், குடும்ப செலவு, கடன்கள் உள்ளிட்ட அனைத்தையும் கணக்கிட்டு பார்த்ததில், மேற்கண்ட காலகட்டத்தில் பொது ஊழியரான டாக்டர் ரமேஷ்பாபு மற்றும் அவரது மனைவி சர்மிளா ஆகியோர், வருமானத்துக்கு அதிகமாக 1.43 கோடி ரூபாய்க்கு அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் சேர்த்துள்ளது ஆதாரங்களுடன் தெரிய வந்தது. இதையடுத்து, திருச்சி மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு மீதும், அவரது மனைவி சர்மிளா மீதும், லஞ்ச ஒழிப்பு போலீசார், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை