இன்ஸ்பெக்டர் மீது பாலியல் புகார் சிறையில் உள்ள சட்ட மாணவியிடம் விசாரணை
திருச்சி:திருச்சி பெண்கள் மத்திய சிறையில் உள்ள சட்டக்கல்லுாரி மாணவியிடம், இன்ஸ்பெக்டர் மீது பாலியல் புகார் அளித்தது தொடர்பாக, மனித உரிமை ஆணைய இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தினார். திருச்சி, பாலக்கரை பகுதியைச் சேர்ந்தவர் கிரிஜா, 28. திருச்சி அரசு சட்டக்கல்லுாரி மாணவியான இவர், அண்மையில் திருச்சி அரசு மருத்துவமனையில் பணியாளரை தாக்கிய வழக்கில் கைதாகி, திருச்சி பெண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த, 2023ம் ஆண்டு வழக்கு தொடர்பாக, காந்தி மார்க்கெட் போலீஸ் ஸ்டேஷன் சென்றபோது, அங்கு இன்ஸ்பெக்டராக இருந்த சுகுமார், கிரிஜாவுக்கு மொபைல்போனில் ஆபாச படங்கள் அனுப்பி, ஆபாசமாக பேசி, பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். அப்போது கிரிஜா, தனியார் கல்லுாரியில் உதவி பேராசிரியராக இருந்தார். இதுகுறித்து அவர் போலீசில் அளித்த புகாரில், இன்ஸ்பெக்டர் சுகுமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த இன்ஸ்பெக்டர் மீது, சென்னையில் உள்ள மனித உரிமைகள் ஆணையத்திலும் கிரிஜா புகார் அளித்திருந்தார். அதன்பேரில், காந்தி மார்க்கெட் போலீசாரை அவ்வப்போது சென்னை அழைத்து, மனித உரிமை ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் மனித உரிமை ஆணையத்தின் இன்ஸ்பெக்டர் காஞ்சனா என்பவர், திருச்சி பெண்கள் மத்திய சிறையில் உள்ள கிரிஜாவிடம், இன்ஸ்பெக்டர் சுகுமார் மீது அளித்த புகார் குறித்து, ஒன்றரை மணி நேரம் விசாரணை நடத்தி உள்ளார். அப்போது, சுகுமார் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள், அதற்கான ஆவணங்கள் குறித்தும் கேட்கப்பட்டுள்ளது. புகாருக்கு உள்ளான இன்ஸ்பெக்டர் சுகுமார், தற்போது தஞ்சை மாவட்டத்தில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.