திருச்சி அருகே மினி வேடந்தாங்கல்; வெளிநாட்டு பறவைகள் விஜயம் துவக்கம்
திருச்சி,: திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே கிளியூர் கிராமத்தில், 380 ஏக்கரில் பரந்து விரிந்த ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு நவம்பர் முதல், மத்திய ஆசியா மற்றும் கிழக்கு ஐரோப்பியா நாடுகளை சேர்ந்த, 180க்கும் மேற்பட்ட பறவையினங்கள், ஆண்டுதோறும் இதமான சூழ்நிலைக்காகவும், இனப்பெருக்கத்துக்காகவும் வந்து செல்வது வழக்கம்.அதன்படி, கிளியூர் ஏரிக்கு தற்போது பல்வேறு பறவையினங்கள் வெளிநாடுகளில் இருந்து வரத்துவங்கி உள்ளன. தற்போது கிளியூர் ஏரியில் வெள்ளை அரிவாள் மூக்கன், உன்னி கொக்கு, பாம்பு தாரா, மஞ்சள் மூக்கு நாரை, சாம்பல் நாரை, கொண்டை நீர் காகம், ஊசிவால் வாத்து, நீலச்சிறவி வாத்து, பழுப்பு கீச்சான்கள் உட்பட பல்வேறு பறவைகள் வந்து உள்ளன.சில பறவைகள், ஏரியில் உள்ள மரங்களில் இனப்பெருக்கத்துக்காக கூடுகள் கட்டி உள்ளன. இதனால் இப்பகுதி, மினி வேடந்தாங்கல் போல காட்சியளிக்கிறது.இதுகுறித்து அப்பகுதி கிராம மக்கள் கூறியதாவது:
ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளில் இருந்து, 25,000த்துக்கும் மேற்பட்ட பறவைகள் வரும். ஏரியில் தற்போது தண்ணீர் நிரம்பி உள்ளது. ஆனால், ஏரி முழுதும் காட்டாமணக்கு செடிகள் வளர்ந்து, ஏரியை ஆக்கிரமித்துள்ளன. ஆகையால், ஏரியில் மரங்களை நட்டு, பறவைகள் வந்து தங்கிச் செல்ல, வனத்துறை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும்.கிளியூர் ஏரியை பறவைகள் சரணாலயமாக அறிவித்து, சீசனுக்கு வரும் பறவைகள் பாதுகாப்பாக இருந்து செல்ல உதவ வேண்டும். கல்லணை அருகில் உள்ளதால், கிளியூர் ஏரியை சரணாலயமாக அறிவித்தால், இந்த இடம் சுற்றுலா தலமாகும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.