மேலும் செய்திகள்
திடீர் மழையால் உளுந்து பயிர் பாதிப்பு
13-Mar-2025
திருச்சி:திருச்சி மாவட்டத்தில், நெல் சாகுபடியை தொடர்ந்து, 14 ஒன்றியங்களிலும் உள்ள விவசாயிகள், வம்பன் 8, வம்பன் 10 ரக உளுந்து விதைப்பு செய்தனர்.புதுக்கோட்டை மாவட்டம், வம்பன் ஆராய்ச்சி மையத்தில் உற்பத்தி செய்து வெளியிடப்பட்ட இந்த ரகம், செம்மண் மற்றும் சரளை மண்ணில் மானாவாரி சாகுபடிக்கு உகந்தது. பெரும்பாலான விவசாயிகள் வேளாண் விரிவாக்க மையங்களில் இந்த விதைகளை வாங்கி விதைத்தனர். தற்போது, உளுந்து பயிர்களில் மஞ்சள் தேமல் நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளதால், மகசூல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.விவசாயிகள் கூறியதாவது: உளுந்து பயிர் வளர்ந்து பூக்கும் தருணத்தில், நோய் தாக்குதலால் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளாக, உளுந்து பயிர்கள், 30 சதவீதம் வரை நோய் பாதிப்புக்குள்ளானது. இந்த ஆண்டு 90 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டதால், விவசாயிகள் பெரும் நஷ்டத்துக்கு ஆளாகி உள்ளனர்.இந்நோய், வெள்ளை ஈக்களால் பரவுவதாக அறிவித்துள்ள வேளாண்மை துறை, நோய் தாக்குதலை கட்டுப்படுத்த சரியான மருந்தும் கொடுக்கவில்லை. வருவாய் துறை மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் விவசாய நிலங்களை பார்வையிட்டு, நிலத்தின் தன்மைக்கு ஏற்ற விதைகளை கொள்முதல் செய்து, விநியோகம் செய்திருந்தால், இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டு இருக்காது. ஏக்கருக்கு 30,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.மயிலாடுதுறை உட்பட டெல்டா மாவட்டங்களில், பல லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள உளுந்து, பச்சைபயிறு ஆகிய பயிர்களில், மஞ்சள் தேமல் நோய் பாதிப்பு அதிகரித்துள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
13-Mar-2025