அமரன் படத்தை இலவசமாக பார்த்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினர்
வேலுார்: வேலுாரில், 'அமரன்' திரைப்படத்தை இலவசமாக பார்க்க, முன்னாள், இந்நாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர், 250 பேருக்கு, தயாரிப்பு நிறுவனம் அனுமதி வழங்கியது.மறைந்த ராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி, ராணுவ வீரர்களை கவுரவிக்கும் விதமாக, சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில், 'அமரன்' திரைப்படம் உருவாக்கப்பட்டது. வேலுார் அடுத்த கம்மவான்பேட்டையில், 90 சதவீதம் பேர், முன்னாள், இந்நாள் ராணுவ வீரர்கள், அவரது குடும்பத்தினர் வசிக்கின்றனர்.அவர்களை கவுரவிக்கும் வகையில், வேலுார் சாய்நாதபுரம் அக்ரஹாரம் பகுதியில் 'புளு' திரையரங்கில் நேற்று, 250 பேருக்கு, 'அமரன்' திரைப்படம் பார்க்க, இலவச காட்சிக்கு தயாரிப்பு நிறுவனம் அனுமதி அளித்தது. இதையடுத்து திரைப்படத்தை பார்த்தனர். முன்னதாக மேஜர் முகுந்த வரதராஜன் உருவ படத்திற்கு, ராணுவத்தினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.