முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி மகன் துரை தயாநிதி சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ்
வேலுார் : தமிழக முதல்வர் ஸ்டாலின் சகோதரரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அழகிரியின் மகன் துரை தயாநிதி, கடந்த ஆண்டு டிச., 6ல், திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு, சென்னை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மூளை நரம்பில் ஏற்பட்ட பாதிப்புக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். கோமா நிலையில் இருந்து மீண்ட தயாநிதியின் மேல் சிகிச்சை மற்றும் பிசியோதெரபி சிகிச்சைக்காக, வேலுார் சி.எம்.சி., மருத்துவமனையில் கடந்த மார்ச், 14ம் தேதி சேர்க்கப்பட்டார்.மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த துரை தயாநிதியை, இரண்டு முறை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார். கடந்த மாதம், 26ம் தேதி எம்.பி., கனிமொழி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.இந்நிலையில், அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டதால், நேற்று காலை மருத்துவமனையிலிருந்து, 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார். அழகிரி மற்றும் அவரது குடும்பத்தினர், துரை தயாநிதியை அழைத்து சென்றனர்.மருத்துவமனையில் இருந்து வெளியேறிய துரை தயாநிதியை, படம் எடுத்த செய்தியாளர்களின் மொபைல்போன் மற்றும் கேமராக்களை அங்கிருந்த, தி.மு.க.,வினர் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் பறித்து தாக்க முயன்றனர்.அழகிரியும் படம் எடுக்க வேண்டாம் என கூறினார். பின், சிறிது நேரத்திற்கு பின், செய்தியாளர்களிடம் பறித்த மொபைல்போன் மற்றும் கேமராக்களை திரும்ப கொடுத்தனர். இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.