தீப்பற்றிய கட்டடத்தில் மழலையர் பள்ளி மூடல்
காட்பாடி:காங்கேயநல்லுாரில் தீ விபத்து நடந்த கட்டடத்தில் இயங்கிய மழலையர் பள்ளியை தற்காலிகமாக மூட பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த காங்கேயநல்லுார் வணிக வளாகத்தில், தரைதளத்தில் தனியாருக்கு சொந்தமான மழலையர் பள்ளி இயங்கி வந்தது. இங்கு, 64 மாணவ - மாணவியர் படித்தனர். கட்டடத்தின் முதல் தளத்தில் உள்ள ரியல் எஸ்டேட் அலுவலகத்தில், நேற்று முன்தினம் 'ஏசி'யில் ஏற்பட்ட மின்கசிவால் தீ பிடித்து எரிந்தது. இதையடுத்து, தரை தளத்தில் இருந்த குழந்தைகளை ஆசிரியர்கள் பத்திரமாக வெளியேற்றினர் . இந்நிலையில், நேற்று முன்தினம் சம்பவ இடத்திற்கு மாவட்ட பள்ளி கல்வித்துறையினர் சென்று ஆய்வு செய்தனர். அதில், பள்ளியின் உரிமத்தை புதுப்பிக்காதது தெரிந்தது. பள்ளியை தற்காலிகமாக மூட அதிகாரிகள் உத்தரவிட்டனர். மேலும், பள்ளி தொடர்ந்து செயல்பட, புதிய இடத்தை அடையாளம் காணும் படி அதிகாரிகள் தெரிவித்தனர்.