உறுதியோடு உழைத்தால் விரும்பியதை அடையலாம் சுப்ரீம் கோர்ட் நீதிபதி சுந்தரேஷ் பேச்சு
வேலுார்: ''எந்த வேலை செய்தாலும், ஒரு விஷயத்தை அடைய முடியும் என்ற உறுதியோடும், கடின உழைப்போடும் மேற்கொண்டால், விரும்பியதை அடைய முடியும்,'' என, சுப்ரீம் கோர்ட் நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் பேசினார்.வேலுார் வி.ஐ.டி., பல்கலையில், பல்கலை கழக தினவிழா மற்றும் ஆண்டு விளையாட்டு விழா நேற்று முன்தினம் நடந்தது. இதில், வி.ஐ.டி., வேந்தர் விசுவநாதன் தலைமை வகித்து பேசுகையில், ''உயர்கல்வி வளர்ச்சியில் தமிழகம் முதலிடத்திலும், கேரளா இரண்டாம் இடத்திலும், பீஹார் கடைசி இடத்திலும் உள்ளது,'' என்றார். ஒழுக்கம் தான் கல்வி
விழாவில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேசியதாவது:வாழ்க்கை விதவிதமான வாய்ப்புகளை நமக்கு கொடுக்கிறது. அறிவு, ஒழுக்கம் தான் கல்வி. நமக்கு தெரியாத விஷயங்களை கற்றுக் கொடுப்பது தான் கல்வி. விளையாட்டு கல்வியின் ஒரு அங்கம். தோல்விகளை ஏற்றுக் கொள்ளக்கூடிய பக்குவத்தை விளையாட்டு கற்றுத் தருகிறது. கடின உழைப்பால் ஒரு விஷயத்தில் வெற்றி பெறுவது என்பதற்கு விளையாட்டு முக்கியமானது. விளையாட்டு மக்களை இணைக்கிறது. நீங்கள் எந்த வேலை செய்தாலும், அதை உள்ளன்போடு செய்ய வேண்டும். உங்களை நம்ப வேண்டும். உங்களால் ஒரு விஷயத்தை அடைய முடியும் என்ற உறுதியோடும், கடின உழைப்போடும் ஒரு பணியை மேற்கொண்டால், விரும்பியதை அடைய முடியும்.இவ்வாறு அவர் பேசினார். கல்வி உதவித்தொகை
கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கும், தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற மாணவர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 1.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 3,400 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. விழாவில், வி.ஐ.டி. துணை தலைவர்கள் சங்கர், சேகர், செயல் இயக்குனர் சந்தியா பென்டாரெட்டி, உதவி துணைத்தலைவர் காதம்பரி விசுவநாதன், ரமணி பாலசுந்தரம், இணை துணை வேந்தர் பார்த்தசாரதி மல்லிக் உட்பட பலர் பங்கேற்றனர்.