பள்ளியில் மாணவிக்கு வளைகாப்பு ரீல்ஸ் வீடியோ எடுத்த மாணவியர்
வேலுார்:வேலுார் அருகே ஒரு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ - மாணவியர், பொய்யான வீடியோ எடுத்து, சமூக வலைதளத்தில் பரவவிடத் திட்டமிட்டனர். அதற்காக, மாணவி ஒருவருக்கு வளைகாப்பு நடத்தப் போவதாக, அழைப்பிதழ் தயாரித்து, அதில் வளைகாப்பு தேதி, நேரம், இடம் ஆகியவற்றை பதிவு செய்து, பள்ளி உணவு இடைவேளையில், மாணவியை அமர வைத்து, வளைகாப்பு நடத்துவது போல படம் பிடித்து பதிவிட்டனர்.இது குறித்து விசாரணை நடத்த, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி உத்தரவிட்டுள்ளார். அவர் கூறியதாவது:மாணவியர் தொடர்பான பிரச்னை என்பதால், தீர விசாரித்த பிறகே நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது, அப்பள்ளி தலைமை ஆசிரியரை அழைத்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே, பள்ளிக்கு மொபைல்போன் எடுத்து வரக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.