1300 ஆண்டு பழமையான சிலைகள் செஞ்சி அருகே கண்டுபிடிப்பு
செஞ்சி : செஞ்சி அருகே 1300 ஆண்டு பழமையான துர்கை, ஜேஷ்டா தேவி சிலைகள் கண்டெடுக்கப்பட்டது.விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த செல்லபிராட்டி கிராமத்தில் விழுப்புரம் வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன், செல்லபிராட்டியைச் சேர்ந்த வாசுதேவன், நுாலகர் பூவழகன் ஆகியோர் கள ஆய்வு செய்தனர். அப்போது 1300 ஆண்டுகள் பழமையான துர்கை, ஜேஷ்டா தேவி சிலைகள் இருப்பதை கண்டறிந்தனர்.இதுகுறித்து ஆய்வாளர் செங்குட்டுவன் கூறியதாவது:செல்லபிராட்டி ஏரி அருகே உள்ள வயலில் பலகைக்கல்லில் உள்ள துர்கை சிற்பத்தை இப்பகுதி மக்கள் காளி என வணங்கி வருகின்றனர். இச்சிலை 8 கரங்களுடன், எருமை தலை மீது பிரம்மாண்டமாக நின்ற நிலையில் உள்ளது. 6 கரங்களில் சங்கு, சக்கரம், வில் அம்பு, வாள், கேடயம், பாசம் ஆகியவற்றை ஏந்தியடி உள்ளது. துர்கை சிற்பங்களில் வழக்கமாகக் காணப்படும் மான் மற்றும் அடியவர் உருவம், தன்னை பலி கொடுக்கும் வீரனின் உருவம் இந்த சிற்பத்தில் இடம் பெறவில்லை.இதே கிராமத்தில் வழிப்போக்கர் மண்டபத்தில் மேலும் ஒரு துர்கை சிற்பம் உள்ளது. ஜேஷ்டா தேவி எனும் மூத்த தேவியின் சிற்பம் இங்குள்ள ஏரியில் உள்ளது. இச்சிற்பத்தை அப்பகுதி மக்கள் மதகு வீரன் என ஆண் தெய்வமாக வணங்கி வருகின்றனர். இந்த சிலைகள் கி.பி.7 மற்றும் 8ம் நூற்றாண்டை சேர்ந்தவை. 1300 ஆண்டுகள் பழமையானவை. இவ்வாறு செங்குட்டுவன் கூறினார்.