சட்டசபை பொது நிறுவனங்கள் குழு அரிசி தரத்தை உயர்த்த அட்வைஸ்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் அரிசியின் தரத்தை உயர்த்த வேண்டும் என சட்டசபை பொது நிறுவனங்கள் குழுவினர், அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.விழுப்புரம் நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில், சட்டசபை பொது நிறுவனங்கள் குழு தலைவர் நந்தகுமார் எம்.எல்.ஏ., தலைமையில் நேற்று ஆய்வு செய்தனர். அங்குள்ள 2 குடோன்களில், பொது விநியோக திட்ட பயன்பாட்டிற்கான பாமாயில், சர்க்கரை, அரிசி, கோதுமை மற்றும் பருப்பு வகைகள் இருப்பை பார்வையிட்டனர். அதில் விழுப்புரம் உள்ளிட்ட 2 மாவட்டங்களில் தான், ரேஷன் அரசி நிறம் மாறி, தரம் குறைந்துள்ளது. அதனை தரமானதாக வழங்க வேண்டும் என, அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டினர்.பின், கிடங்கில் உள்ள பொருட்களை எடையிட்டு சோதனை செய்தனர். பொருட்கள் இருப்பு பதிவேடு, பொருட்களின் தரம், ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பொருட்கள், காலை உணவு திட்டம், மதிய உணவுத் திட்டம் மற்றும் விடுதிகளுக்கு அனுப்பும் பொருட்களுக்கான பதிவேடுகளை ஆய்வு செய்தனர். அப்போது, கிடங்கிற்கு ஏறி செல்லும் பாதுகாப்பற்ற இரும்பு படிக்கட்டினை மாற்றி, நிரந்தரமான படிக்கட்டு அமைக்க வேண்டும் என அமைச்சர் பொன்முடி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.இதையடுத்து, விழுப்புரம் பூமாலை வணிக வளாகத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினரின் உற்பத்தி பொருள் கடைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அங்குள்ள கழிவறை வளாகம் பராமரிப்பின்றி இருந்ததை பார்த்து, அதிகாரிகளை கடிந்துகொண்டு, துாய்மையாக பராமரிக்க அறிவுறுத்தினர்.கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான், டி.ஆர்.ஓ., அரிதாஸ், சப் கலெக்டர் திவ்யான்சு நிகாம், சட்டசபை பேரவை செயலாளர் சீனிவாசன், நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் மனோகரன் உடனிருந்தனர்.