உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ரூ.35 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா; பாழாகி வரும் அவலம்

ரூ.35 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா; பாழாகி வரும் அவலம்

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் பேரூராட்சி பகுதியில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்காவின் மைய பகுதியில் டிரான்ஸ்பார்மர் உள்ளதால் சிறுவர்கள் பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. டிரான்ஸ்பார்மரை மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.திருவெண்ணெய்நல்லுார் பேரூராட்சிக்குட்பட்ட 1வது வார்டு பகுதியில் உள்ள மணக்குள விநாயகர் மருத்துவமனை பின்புறம் கடந்தாண்டு 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 30 சென்ட் பரப்பளவில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது.பூங்காவில், அப்பகுதியைச் சேர்ந்த பெரியவர்கள், மருத்துவமனைக்கு வருபவர்கள் நடைபயணம் மேற்கொண்டனர். குழந்தைகள் விளையாடி மகிழ்ந்தனர்.பூங்காவின் மைய பகுதியில் உயர்மின் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது. சில நேரங்களில் காற்று அதிகளவில் அடிக்கும் போது மின்கம்பிகள் அறுந்து கீழே விழுவதும் மின் கம்பிகள் உராய்வு ஏற்பட்டு தீப்பொறி விழுவதும் வாடிக்கையாக உள்ளது.இதனால் உரிய பாதுகாப்பு இல்லாததால் பேரூராட்சி அதிகாரிகள் பூங்காவிற்கு யாரும் செல்லாதவாறு பூட்டு போட்டனர்.மேலும் டிரான்ஸ்பார்மரை மாற்றி வேறு இடத்தில் அமைக்க வேண்டி மின்வாரிய அலுவலகத்திற்கு மனு அளித்து அதற்கான பணத்தையும் பேரூராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ளது.பணத்தை கட்டி பல மாதங்கள் ஆகியும் மின்வாரிய அதிகாரிகள் இதுவரை எவ்வித நவடிக்கை மேற்கொள்ளாமல் உள்ளனர். இதனால் பூங்கா பயன்பாடின்றி புதர் மண்டியுள்ளது.இதனை சாதகமாக்கி, இரவு நேரங்களில் போதை ஆசாமிகள் உள்ளே நுழைந்து அங்குள்ள விளையாட்டு பொருட்களை சேதப்படுத்தியும், திருடியும் செல்கின்றனர். எனவே மின்வாரிய அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து அங்குள்ள டிரான்ஸ்பார்மரை மாற்றி அமைத்து பூங்காவினை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி