சி.சி.டி.வி., சேதம் ஒருவர் கைது
விழுப்புரம்: வளவனுார் அருகே நிலப்பிரச்னையில் கண்காணிப்பு கேமராவை உடைத்து, பெண்ணை மிரட்டிய நபரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் அடுத்த ஒருகோடி கிராமத்தைச் சேர்ந்தவர் சிட்டிபாபு, 62; இவரது தம்பி நாராயணன், 60; இவர்களுக்குச் சொந்தமான நிலம் அதே கிராமத்தில் உள்ளது. இருவருக்குமிடையே சிறிய அளவிலான புறம்போக்கு இடத்தை அனுபவிப்பது தொடர்பாக, முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், நாராயணன் மகன் சூர்யகுமார், 37; வீட்டில் வேலை பார்த்து வரும் வேடம்பட்டைச் சேர்ந்த காளி மகன் அஜித்குமார், 28; என்பவர், சூர்யகுமார் துாண்டுதலின் பேரில், கடந்த 10ம் தேதி சிட்டிபாபுவின் தோட்டத்தில் புகுந்து அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை உடைத்து சேதப்படுத்தியுள்ளார். அதனை தட்டிக்கேட்ட சிட்டிபாபு மகள் சாருமதியை, 43; அஜித்குமார் திட்டி, மிரட்டியுள்ளார். புகாரின் பேரில், அஜித்குமார், சூர்யகுமார் மீது வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து, அஜித்குமாரை கைது செய்தனர்.