மாசி பட்டத்திற்கு எள் விதை விவசாயிகளுக்கு விநியோகம்
வானுார்: திருச்சிற்றம்பலம் வேளாண்மை விரிவாக்க மையத்தில், மாசி பட்டத்திற்கு ஏற்ற டி.எம்.வி.7 எள் ரகம் மற்றும் இதர இடுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சியில், விவசாயிகளுக்கு வழங்கி வேளாண் உதவி இயக்குனர் எத்திராஜ் பேசுகையில், 'வானுார் தாலுகாவில் மாசி பட்டத்தில், எள் சாகுபடி பரப்பை அதிகரிக்க விவசாயிகளின் வயல்களில் தொகுப்பு செயல் விளக்கம் அமைக்க 80 எக்டர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எள் விதைகள், மாங்கனீஸ் சல்பேட், திரவ உயிர் உரங்கள் மற்றும் உயிர் ரகம், பூஞ்சான காரணி சூடோமோனாஸ் போன்ற இடுபொருட்கள் விவசாயிகளுக்கு 50 சத மானிய விலையில் வழங்கப்பட உள்ளது. இடுபொருட்கள் தேவைப்படும் விவசாயிகள், சம்மந்தப்பட்ட உதவி வேளாண் அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன் பெறலாம்' என்றார்.உதவி விதை அலுவலர் மோகன் குமார், உதவி வேளாண்மை அலுவலர் ஜெயலட்சுமி, உதவி தொழில் நுட்ப மேலாளர் சந்திரசேகர் உடனிருந்தனர்.