விழுப்புரத்தில் விநாயகர் சிலைகள், பூஜை பொருட்கள் விற்பனை ஜோர்
விழுப்புரம் : விழுப்புரத்தில் விநாயகர் சதுர்த்திக்கான சிலைகள், பூஜைப் பொருட்கள் விற்பனை தொடங்கியது.விழுப்புரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதற்காக, விழுப்புரம் எம்.ஜி.ரோடு, பாகர்ஷா வீதி, நேருஜி சாலை, கே.கே.ரோடு உள்ளிட்ட முக்கிய வீதிகளில் நேற்று மதியம் முதல் வித விதமான, வண்ணமயமான களிமண் விநாயகர் சிலைகள், அதற்கான அலங்கார குடைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.கடைவீதிகளில் பூஜைபொருட்கள் வாங்கவும் மக்கள் கூட்டம் குவிந்தனர். பழங்கள், அவல், பொரி, சோளம், கம்பு, கரும்பு, நாவல் பழம், விளாம்பழம், எருக்கம் பூ, அருகம் புல் மாலைகள், மா இலை தோரணங்கள் உள்ளிட்ட பூஜைக்கு தேவையான பொருட்கள் குவிக்கப்பட்டிருந்ததை மக்கள் வாங்கிச் சென்றனர். இதனால், எம்.ஜி., ரோடில் விழாக்கால கூட்டம் கூடியது. களிமண் விநாயகர் சிலைகள் ரூ.50 முதல் ரூ.1,000 வரையும், குடைகள் ரூ.20 முதல் ரூ.50 வரையும், விநாயகர் சதுர்த்தி பூஜை பொருள் செட் ரூ.50 முதல் ரூ.100 வரை விற்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக முக்கிய வீதிகளில், பொது மக்கள் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.