பொது அறிவும், தனித்திறமையும் தான் போட்டித் தேர்வுக்கு அளவீடு
விழுப்புரம் : 'போட்டித் தேர்வுகளில் நமது மதிப்பெண் கேட்க மாட்டார்கள். நம் பொது அறிவும், நம் திறமையும் தான் அங்கு அளவீடாக இருக்கும்' என மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அறிவழகன் பேசினார். விழுப்புரத்தில் நடந்த 'தினமலர் - பட்டம்' இதழ் வினாடி வினா நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது:அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் அனைவரையும் இரு கண்களாக கல்வித்துறை பாவித்து வழி நடத்துகிறது. அனைத்து மாணவர்களும் அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்று, அதிக மதிப்பெண் எடுக்கவும், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறவும், தடைகளைத் தாண்டி சாதிக்கவும், பொது அறிவு அவசியமாகிறது.மாணவர்கள் வாழ்வின் மேன்மைக்கு பொது அறிவும், பொது அறிவு சார்ந்த படிப்பும் அவசியமாகும். அதன்படி பொது அறிவை புத்தகங்கள் மூலம் பெறலாம். ஜெனரல் ஸ்டடிஸ் என்பதை தினசரி செய்தித்தாள்கள் தான் கொடுக்கிறது. பாட புத்தகங்களுடன், 'தினமலர் - பட்டம்' இதழை தொடர்ந்து படிப்பதன் மூலம் பொது அறிவு வளரும். விழுப்புரம் மாவட்டம் கல்வியில் கீழ் நிலையில் இருந்து, முன்னேற்றம் பெற்று மேல்நிலை நோக்கி உயர்ந்து வருகிறது. அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளியளவில் கடந்தாண்டு பிளஸ் 2 தேர்ச்சி 94 சதவீதம் பெற்றுள்ளோம். மாநில அளவில் 20வது இடத்துக்கு முன்னேறி வந்துள்ளோம்.பத்தாம் வகுப்பு தேர்வில், அரசு பள்ளியளவில் 6வது இடத்துக்கு முன்னேறியுள்ளோம். 13 ஆயிரம் அரசு பள்ளி மாணவர்கள் என்ற அதிக எண்ணிக்கையில் நாம் முன்னேற்றம் பெற்றுள்ளது பெருமை. ஒட்டு மொத்த பள்ளியளவில் 10வது இடத்திற்கு முன்னேறியுள்ளோம்.மாணவர்களுக்கு கல்வியோடு உடல் தகுதியும் அவசியும். அதற்கான வாய்ப்புகளும் கல்வித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வரும் கல்வியாண்டில் ஒரு மாணவர் கூட தோல்வி அடையவில்லை என்ற நிலையை எட்ட வேண்டும்.மதிப்பெண் என்பது ஒரு அளவீடு தான். 35 மதிப்பெண் பெற்ற ஒருவர், பிற்காலத்தில் பொது அறிவு மூலம் தேர்வு எழுதி கலெக்டர் ஆகவும், எஸ்.பி.,யாகவும் வந்துள்ளனர். டி.என்.பி.எஸ்.சி., - யூ.பி.எஸ்.சி., - எஸ்.எஸ்.சி., - ஆர்.ஆர்.பி., போன்ற போட்டித் தேர்வுகளின்போது நமது மதிப்பெண் கேட்க மாட்டார்கள். நம் பொது அறிவும், நம் திறமையும் தான் அங்கு அளவீடாக இருக்கும். 3 மணி நேரம் நடக்கும் அந்த தேர்வில் உங்களுடைய எதிர்காலமும், வாழ்க்கையும் மாறும், மேம்படும்.இப்போது சத்துணவு உதவியாளர் பணி முதல், கலெக்டர் பணிவரை அனைத்துக்கும் போட்டி தேர்வு வந்து விட்டது. அதனால், பொது அறிவு, தினசரி தகவல்களும் அவசியம் என்பதால், 'தினமலர் - பட்டம்' இதழை படித்து நீங்கள் உயர வேண்டும்.நாங்கள் படித்த காலத்தில் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., போன்ற போட்டித் தேர்வு நடப்பதே எங்களுக்கு தெரியாது. அப்போது குரூப் 1, குரூப் 2 தேர்வு எழுதி இந்த பதவிகளுக்கு வந்துள்ளோம்.இப்போது பல படிப்புகள், பல தேர்வுகள் குறித்து கை விரல் நுனியில் உங்களுக்கு தகவல் கிடைக்கிறது. அதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு சி.இ.ஓ., அறிவழகன் பேசினார்.