கஞ்சா ஊடுருவலை தடுக்க முடியாமல் திணறும் போலீசார்
விழுப்புரம் மாவட்டத்தில் கஞ்சா ஊடுருவலைத் தடுக்க முடியாமல் போலீசார் தவிக்கும் நிலையில், மறுபுறம் இந்த பழக்கத்தால் மாணவர்கள் சீரழிகின்றனர்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் குடித்து 68 பேர் இறந் தனர். இதனை தொடர்ந்து, இந்த மாவட்டத்தில் மட்டுமின்றி, விழுப்புரம் மாவட்டத்திலும் போலீ சார் தீவிர ரெய்டு நடத்தி சாராய விற்பனையில் ஈடுபடுவோரை கைது செய்தனர்.இந்த சாராய விற்பனை சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த காவல்துறை உயர் அதிகாரிகள், போலீசார் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். சாராய வேட்டையில் கவனம் செலுத்திய விழுப்புரம் மாவட்ட போலீசார், அதைவிட கூடுதலான போதையைத் தரும் கஞ்சா விற்பனையை ஒழிக்கத் தவறியுள்ளனர்.கஞ்சா விற்பனையால், பள்ளி செல்லும் மாணவர்களும், கல்லுாரி செல்லும் இளைஞர்களும் அதை உட்கொண்டு மதிமறந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.மாவட்டத்தில், ஆங்காங்கே கஞ்சா விற்பனை செய்வோரை மட்டும் பிடித்து கைது செய்யும் போலீசார், கஞ்சாவை மொத்தமாக வாங்கி, விற்பனை செய்யும் முக்கிய குற்றவாளியை பிடிக்க முடியாமல் திணறுகின்றனர். இதனால், இளம் சமூகம் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி, சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவது தொடர் கதையாகியுள்ளது.-நமது நிருபர்-