டிராக்டர் மீது வேன் மோதி விபத்து திருமணத்திற்கு சென்ற 10 பேர் காயம்
விழுப்புரம்: விழுப்புரம் பைபாஸ் சாலையில், டிராக்டர் மீது வேன் மோதிய விபத்தில், திருமண விழாவிற்கு சென்ற 10 பேர் காயமடைந்தனர். விழுப்புரம் மகாராஜபுரம், தாமரைகுளம் பகுதியை சேர்ந்தவர் வடிவேல், 69; இவரது மகன் திருமணம், நேற்று மயிலம் முருகர் கோவிலில் நடந்தது. இந்த திருமண நிகழ்ச்சிக்கு, நேற்று காலை வீட்டிலிருந்து டி.என்.32 எம் 2782 எண் கொண்ட மகிந்திரா டூரிஸ்ட் வேனில் உறவினர்கள், குடும்பத்தினர் புறப்பட்டு சென்றனர். காலை 6.30 மணிக்கு வேன், விழுப்புரம் பைபாஸ் சாலை வழியாக, விராட்டிக்குப்பம் சாலை சந்திப்பு அருகே சென்றபோது, பேரங்கியூரிலிருந்து நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு விக்கிரவாண்டி நோக்கி சென்ற டி.என். 27. யு. 8799 எண்ணுடைய டிராக்டர், டூரிஸ்ட் வேனை முந்தி சென்றது. அப்போது, டிராக்டர் டிப்பர் மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது. வேனின் முன் பக்கமும், கண்ணாடியும் உடைந்து சேதமடைந்தது. வேனில் அமர்ந்திருந்த தாமரைகுளத்தை சேர்ந்த வடிவேல், 69; சுந்தர், 50; கோதண்டம், 44; லட்சுமி, 45; விஜயா 55; திருமூர்த்தி, 10; நிஷாந்த், 8; உள்ளிட்ட 10 பேர் லேசான காயமடைந்தனர்.விபத்து குறித்து தகவல் அறிந்த, விழுப்புரம் நெடுஞ்சாலை ரோந்து போலீசார், விரைந்து சென்று வேனில் காயமடைந்தவர்களை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் சிக்கிய வேனையும், டிராக்டரையும் நெடுஞ்சாலையிலிருந்து அப்புறப்படுத்தினர். இதனால், சிறிது நேரம் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து, விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர். லட்சுமணன் ஆறுதல்
விபத்தில் சிக்கி காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களை, லட்சுமணன் எம்.எல்.ஏ., முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரிக்கு நேரில் சென்று,உடல் நலம் விசாரித்து, ஆறுதல் கூறினார். விழுப்புரம் தி.மு.க., கிழக்கு நகர செயலாளர் வெற்றிவேல், ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.