மாவட்டத்தில் 1,300 விநாயகர் சிலைகள் விஜர்சனம்
விழுப்புரம் : மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி, விழுப்புரம் சப் டிவிஷனில் 465, திண்டிவனத்தில் 302, செஞ்சியில் 450, கோட்டக்குப்பத்தில் 208, விக்கிரவாண்டியில் 311 என மொத்தம் 1,736 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மூன்று நாட்கள் வழிபாடு செய்த இந்த சிலைகளை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்து ஆறு, கடல் போன்ற நீர் நிலைகளில் போலீஸ் பாதுகாப்புடன் கரைத்தனர். விழுப்புரம், திருவெண்ணெய்நல்லுார் சுற்றுப்பகுதி கிராமங்களில் வழிபாடு செய்த சிலைகளை கடலுார் தேவனாம்பட்டினம் சில்வர் பீச் மற்றும் புதுச்சேரி கடலில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதேபோன்று, திண்டிவனம், செஞ்சி, மரக்காணம் பகுதி விநாயகர் சிலைகளை மரக்காணம் கடலில் கரைப்பதற்கு ஏற்படு செய்யப்பட்டது. நேற்று காலையில் இருந்தே லாரி, மினி லாரி, டிராக்டர் போன்ற வாகனங்களில் விநாயகர் சிலைகளை கடற்கரைக்கு கொண்டு சென்று கரைத்தனர். விழுப்புரம் பழைய பஸ் நிலையம் எதிரில் இருந்து ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க ஊர்வலமாக எடுத்துசென்றனர். இதேபோன்று, காணை சுற்றுப்பகுதிகளை சேர்ந்த விநாயகர் சிலைகள், எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டில் கரைத்தனர். எந்தவித அசம்பாவிதங்களும் நடக்காமல் இருக்க மாவட்டத்தில் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் 1250 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாவட்டத்தில் நேற்று மொத்தம் 1300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.