வெள்ளத்தில் ஆற்றில் தத்தளித்தவர் பலி 17 மணி நேரத்திற்கு பின் 2 பேர் மீட்பு
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே வெள்ளத்தில் நடு ஆற்றில் சிக்கிய 3 பேரில் ஒருவர் இறந்தார். 2 பேர் மீட்கப்பட்டனர்.திருவெண்ணெய்நல்லுார், முத்தையா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கலையரசன், 55; பால் வியாபாரி. இவர், இவரது மனைவி சுந்தரி மற்றும் மகன் புகழேந்தி மூவரும் திருவெண்ணெய்நல்லுார் - எல்லீஸ்சத்திரம் சாலை தாசில்தார் அலுவலகம் எதிரே ஆற்றோரம் வீடு கட்டி வசித்து வந்தனர்.நேற்று முன்தினம் அதிகாலை 6:30 மணியவில் மலட்டாற்றில் தண்ணீர் வரத்து தொடங்கியது. உடன், கலையரசன் மற்றும் அவரது மனைவி சுந்தரி, மகன் புகழேந்தி ஆகியோர் திருவெண்ணெய்நல்லுார் சுடுகாட்டு பாதை வழியாக நடந்து சென்றனர்.சிறிது நேரத்தில் தண்ணீர் வரத்து அதிகரித்து மூவரையும் அடித்து சென்றது. இதில், சுந்தரியும், புகழேந்தியும் நீந்தி ஆற்றில் உள்ள மரக்கிளைகளை பிடித்து மரத்தில் மேல் ஏறினர்.கலையரசன் நீந்த முடியாமல் வெள்ளத்தில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டார்.வெள்ள நீரை பார்க்க வந்த பொதுமக்களிடம் தாங்கள் இருப்பதை தெரியப்படுத்த தெர்மாகோலை காட்டியுள்ளனர். அவர்கள் இருப்பதை அறிந்த அங்கிருந்தவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.அதனைத் தொடர்ந்து, 17 மணி நேரத்திற்கு பின் நள்ளிரவு 12:30 மணியளவில் டி.ஐ.ஜி., திஷா மித்தல், எஸ்.பி., தீபக் சிவாச் தலைமையிலான தேசிய பேரிடர் மீட்பு பணி வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கயிற்றை கட்டி 3 மணி நேரமாக போராடி சுந்தரி, புகழேந்தியை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.மேலும் நேற்று காலை 7:00 மணியளவில் கலையரசனை தேடும் பணியை துவங்கினர். ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் கலையரசனை சடலமாக மீட்கப்பட்டார்.திருவெண்ணெய்நல்லுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.