குளத்தின் தடுப்புச் சுவரில் பைக் மோதி 2 வாலிபர்கள் பலி: மேல்மலையனுாரில் பரிதாபம்
அவலுார்பேட்டை: மேல்மலையனுாரில், சாலையோர குளத்தின் தடுப்பச்சுவரில் பைக் மோதி, சிறுவன் உட்பட 2 பேர் இறந்தனர். விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அடுத்த சிறுதலைப்பூண்டியை சேர்ந்தவர் முருகன். வி.ஏ.ஓ., இவர், சில தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் இறந்தார். கருமகாரியம் நேற்று நடந்தது. இதற்காக நேற்று முன்தினம் இரவு சிறுதலைப்பூண்டி கிராமத்திற்கு வந்த இறந்த முருகனின் உறவினர்களான சிந்தகம்பூண்டியை சேர்ந்த வீராசாமி மகன் நதீஷ், 19; பிரபு மகன் அஸ்விந்த், 16; கள்ளப்புலியூர் ரேணுகுமார் மகன் விஷால், 16; ஆகிய மூவரும் ஸ்பிளண்டர் பைக்கில் மேல்மலையனுார் சென்றனர். இரவு 10:00 மணிக்கு மேல்மலையனுார் அக்னி குளம் சாலை வளைவில் வேகமாக வந்த பைக் திரும்பியபோது, நிலை தடுமாறி குளத்தின் தடுப்புச்சுவர் மீது பைக் மோதியது. விபத்தில் பைக்கை ஓட்டிச்சென்ற நதீஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார். அஸ்விந்த் செஞ்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். விஷால் செஞ்சி அரசு மருத்தவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து மேல்மலையனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த சாலை வளைவில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. வேகத்தடை அமைத்து எச்சரிக்கை பலகை வைக்க நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.