குடிநீரில் குளோரின் கலப்பு 3 பள்ளி மாணவியர் மயக்கம்
விக்கிரவாண்டி:விக்கிரவாண்டி அருகே அரசு பள்ளியில் மூன்று மாணவியர் திடீரென மயக்கம் அடைந்தனர்.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த குண்டலபுலியூரில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் படிக்கும் அதே கிராமத்தை சேர்ந்த 5, 15, 12 வயது மாணவியர் நேற்று காலை 10.30 மணிக்கு திடீரென மயங்கி விழுந்தனர். அதிர்ச்சி அடைந்த தலைமை ஆசிரியர் சங்கர், உடனடியாக மருத்துவக் குழுவினருக்கும், மாணவியரின் பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவித்தார். விக்கிரவாண்டி வட்டார அரசு மருத்துவமனை டாக்டர் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் மயக்கமடைந்த மாணவியர் மற்றும் பிற மாணவர்களை பரிசோதித்தனர். அதில், மாணவியர் மூவருக்கும் விஷக் காய்ச்சல் இருப்பது தெரிந்தது. குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் சிவசங்கரன் தலைமையிலான குழுவினர், பள்ளி வளாகம் மற்றும் குண்டலபுலியூர் கிராம குடிநீர் தொட்டிகளில் இருந்து தண்ணீர் மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனர். மேலும், குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்யுமாறு ஊராட்சி செயலரிடம் அறிவுறுத்தினர்.மாணவியர் தங்கள் வீட்டில் இருந்து எடுத்து வந்த தண்ணீரை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் பரிசோதித்ததில், குளோரின் அதிகம் கலந்திருப்பது தெரிய வந்துள்ளது. அதுதொடர்பாக, அதிகாரிகள் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.