மீண்டும் மர்ம விலங்கு கடித்து செஞ்சி அருகே 4 ஆடுகள் பலி
செஞ்சி: செஞ்சி அருகே மர்ம விலங்கு கடித்து 4 ஆடுகள் இறந்தன. 8 ஆடுகள் படுகாயம் அடைந்தன. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த பெரும்புகை கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள். இவர், வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று காலை பார்த்தபோது, மர்ம விலங்குகளால் தாக்கப்பட்டு 4 வெள்ளாடுகளை இறந்து கிடந்தன. மேலும், 8 ஆடுகள் காயமடைந்திருந்தன. தகவலறிந்த செஞ்சி வனத்துறை வனவர்கள் அங்கமுத்து, பாலசுந்தரம் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். கால்நடை மருத்துவர் நிர்மல்குமார் தலைமையிலான குழுவினர், காயமடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தனர். இறந்த ஆடுகளை பிரேத பரிசோதனை செய்தனர். கடந்த 15 நாட்களுக்கும் மேலாக மர்ம விலங்கின் தாக்குதல் இல்லாமல் இருந்தது. இதனால் நிம்மதி அடைந்திருந்த நிலையில் மீண்டும் மர்ம விலங்கு தாக்குதல் நடந்திருப்பது வல்லம் ஒன்றிய விவசாயிகளை கவலையடைய செய்துள்ளது. கால்நடைத்துறை எச்சரிக்கை பெரும்புகை கிராமத்தை சுற்றியுள்ள ஆனத்துார், நெகனுார், வடவானுார், களையூர், கடம்பூர், விற்பட்டு, சேதுவராயநல்லுார், ஊரணிதாங்கல் உள்ளிட்ட கிராமங்களில் ஆடு வளர்ப்பவர்கள் இரவில் கொட்டகைகளில் மின் விளக்குகளை எரியவிட்டு, பாடல்களை ஒலிக்க செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.