ரூ.1.60 கோடி ஹவாலா பணம் விழுப்புரத்தில் 4 பேர் சிக்கினர்
விழுப்புரம்:விழுப்புரத்தில், 1.60 கோடி ரூபாய் ஹவாலா பணத்துடன் வந்த நான்கு பேரை போலீசார், வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர்.விழுப்புரம் பஸ் நிலைய புறக்காவல் நிலைய போலீசார் நேற்று காலை, பஸ் நிலையத்தில் ரோந்து சென்ற போது, கையில் பையுடன் வந்த நான்கு பேரை சந்தேகத்தில் சோதனை செய்தனர். நான்கு பைகளில் தலா 40 லட்சம் ரூபாய் என, மொத்தம், 1.60 கோடி ரூபாய் இருந்தது.உடன் நான்கு பேரையும், விழுப்புரம் தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். விசாரித்ததில், அவர்கள், திருச்சி, வரகனேரியைச் சேர்ந்த ராஜ்முகமது, 35, முகமது ரியாஸ், 30, சிராஜுதீன், 31, அபுபக்கர் சித்திக், 31, என்பதும், திருச்சி காந்தி மார்கெட்டில் கூலி வேலை செய்து வருவதும் தெரியவந்தது.இவர்கள், நேற்று காலை சென்னை பிராட்வேயில் பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த நான்கு பேர் கொடுத்த பைகளை வாங்கிக் கொண்டு, எழும்பூரில் இருந்து புதுச்சேரி செல்லும் பாசஞ்சர் ரயிலில் விழுப்புரம் வந்துள்ளனர். இங்கிருந்து, திருச்சிக்கு பஸ்சில் செல்ல, விழுப்புரம் பஸ் நிலையம் வந்தபோது பிடிபட்டுள்ளனர்.போலீசார், சென்னை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் நான்கு பேரையும் ஒப்படைத்தனர்.