வீடு புகுந்து மூதாட்டியிடம் 4 சவரன் நகை திருட்டு
விக்கிரவாண்டி : வீட்டில் துாங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். விக்கிரவாண்டி அடுத்த கயத்துார் கிராமத்தை சேர்ந்தவர் சங்கரி, 78; இவர் தனது மகன் கணேஷூடன் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் குடும்பத்தாருடன் படுத்து உறங்கினார். அப்போது, நள்ளிரவில் மழை பெய்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்நிலையில் இருட்டை பயன்படுத்திக்கொண்டு அவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்ற மர்ம ஆசாமிகள் பீரோவை திறந்தனர். அதில் பணம் ஏதும் இல்லாததால், அதன் அருகே படுத்திருந்த சங்கரி கழுத்தில் அணிந்திருந்த 4 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர். சம்பவத்தை தொடர்ந்து அருகருகே இரு வீடுகளில் திருட்டு முயற்சி அரங்கேறி உள்ளது. மேலும், அதே பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டிருந்தது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் சப்--இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்து வருகின்றனர்.