உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / புறவழிச்சாலையில் 4டி ஸ்பீடு ரேடார் அமைக்க ஆய்வு: மாவட்டத்தில் விபத்தை தடுக்க நடவடிக்கை

புறவழிச்சாலையில் 4டி ஸ்பீடு ரேடார் அமைக்க ஆய்வு: மாவட்டத்தில் விபத்தை தடுக்க நடவடிக்கை

விழுப்புரம்: சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விபத்தைத் தடுக்க '4டி ஸ்பீடு ரேடார்' கருவி அமைப்பது குறித்து கலெக்டர், ஏ.டி.எஸ்.பி., ஆய்வு மேற்கொண்டனர். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையானது, விழுப்புரம் மாவட்ட எல்லையான ஓங்கூரில் துவங்கி, அரசூர் அடுத்த சித்தானங்கூர் வரை 75 கி.மீ., துாரம் செல்கிறது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தபோது விபத்தில் மாநிலத்தில் முதலிடம் அல்லது இரண்டாம் இடத்தில் விழுப்புரம் இருந்தது. இந்த விபத்துகள் அதிகளவில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடந்தது. இதனால், இச்சாலையில் அதிக விபத்துகள் நடைபெறும் இடங்களை நகாய் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் கண்டறிந்தனர். அந்த இடங்களில் பேரிகார்டுகள், ைஹமாஸ் விளக்குகள், சிக்னல் பிளிங்கர்கள் அமைத்து விபத்து தடுப்பு நடவடிக்கையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் காவல் துறையினர் ஈடுபட்டனர். தற்போது இச்சாலையில் நடக்கும் விபத்துகளைத் தடுக்கும் விதமாக '4டி ஸ்பீடு ரேடார்' கருவி அமைக்கும் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல் துறையினர் அதிரடியாக ஈடுபட்டுள்ளனர். இதற்காக, விழுப்புரம் விராட்டிக்குப்பம் பாதை அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் '4டி ஸ்பீடு ரேடார்' கருவி அமைக்க கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான், ஏ.டி.எஸ்.பி., தினகரன் ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது கலெக்டர் கூறுகையில், 'விழுப்புரம் மாவட்டத்தில் சாலை விபத்துகள் நடைபெறாத வகையில் மாவட்ட நிர்வாகம், காவல் துறை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்ந்த அலுவலர்களுடன் அவ்வபோது ஆய்வுக் கூட்டங்களும், கள ஆய்வுகளும் மேற்கொண்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், விராட்டிக்குப்பம் பாதை அருகே விபத்துகளைத் தடுக்கும் விதமாக கோயம்புத்துாரில் உள்ள தனியார் நிறுவனம் மூலம் '4டி ஸ்பீடு ரேடார்' கருவி அமைக்க நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த கருவியானது தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் பொருத்தப்படும். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வரும் வாகனங்கள், சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுவது. இருசக்கர வாகனத்தில் 3 பேர் செல்வது, இருசக்கர வாகனத்தில் ெஹல்மெட அணியாமல் ஓட்டுவது போன்ற அனைத்து விதமான சாலை விதிமீறல்களும் கண்காணிக்கப்பட்டு, எஸ்.பி., அலுவலகத்தில் வீடியோவாகாவும், புகார் குறித்தும் தானியங்கி முறையில் பதிவேற்றம் செய்யப்படும். மேலும், சாலை விதிகளை மீறிய வாகனங்களுக்கு அபராதம் விதிப்பதோடு, சம்மந்தப்பட்ட வாகன உரிமையாளருக்கு குறுஞ்செய்தியும் அனுப்பப்படும். இதன் மூலம் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளை வெகுவாக குறைக்க முடியும்' என்றார். அப்போது, ஏ.டி.எஸ்.பி., தினகரன், டிராபிக் இன்ஸ்பெக்டர் வசந்த், சப் இன்ஸ்பெக்டர் விஜயரங்கன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி