தேசிய அளவிலான கராத்தே போட்டி; 6 மாணவர்கள் தங்கம் வென்று சாதனை
விழுப்புரம் : பஞ்சாபில் நடந்த தேசிய அளவிலான கராத்தே போட்டியில், விழுப்புரம் மாணவர்கள் 6 பேர் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.பஞ்சாப் மாநிலம், சுல்தான்பூரில் 2வது தேசிய அளவிலான கராத்தே போட்டிகள், கடந்த ஏப்ரல் 26ம் தேதி தொடங்கி மூன்று நாள்கள் நடந்தது. இப்போட்டியில், தமிழகத்திலிருந்து 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அதில், விழுப்புரம் மாவட்ட மாணவர்கள் 15 பேர் பங்கேற்றனர்.விழுப்புரம் எய்ம்ஸ் கராத்தே மற்றும் யோகா இன்ஸ்டியூட் பயிற்சி மையத்தில் பயின்று வரும் இவர்கள், சீனியர் பயிற்சியாளர் சென்சாய் ரகுராமன் தலைமையில், தலைமை பயிற்சியாளர் கார்த்திக் முன்னிலையில் பங்கேற்றனர். 6 வயதுக்குட்பட்டோர் பிரிவில் (25 கிலோ எடை பிரிவு) கனிஷ்கா, 13 வயதுக்குட்பட்டோர் பிரிவில் (45 கிலோ) மணிகண்டன், சீனியர் பிரிவில் (55 கிலோ) ஷியாம், 13 வயதுகுட்பட்டோர் (35 கிலோ) பிரிவில் கபிலன், 12 வயதுக்குட்பட்டோர் பிரிவில் (30 கிலோ) கார்த்திகேயன், 15 வயதுக்குட்பட்டோர் பிரிவில் (35 கிலோ) மோனிஷ் ஆகிய 6 பேர், முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றனர்.இதே போல், சீனியர் 45 கிலோ, 60 கிலோ எடை பிரிவுகளில் ரஞ்சித்குமார், பூஜா, கோபாலகிருஷ்ணன், சந்தோஷ் ஆகிய 4 பேர் வெள்ளி பதக்கமும், பெண்கள் மற்றும் ஜூனியர் பிரிவில் (60 கிலோ, 30 கிலோ) ஜப்பான்குட்டி, சுதாகரன், நர்மதா ஆகிய 3 பேர் வெண்கல பதக்கமும் வென்று சாதித்து, தமிழகத்திற்கும், விழுப்புரம் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தனர்.பதக்கம் வென்று, நேற்று காலை ரயில் மூலம் விழுப்புரம் வந்த வீரர், வீராங்கனைகளை, மாவட்ட கராத்தே ஆசோசியேஷன் சார்பில் வரவேற்று பாராட்டினர்.