உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  சப் இன்ஸ்பெக்டர் எழுத்து தேர்வு 6,569 பேர் விண்ணப்பம்

 சப் இன்ஸ்பெக்டர் எழுத்து தேர்வு 6,569 பேர் விண்ணப்பம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் சப் இன்ஸ்பெக்டர் எழுத்து தேர்வு வரும் 21ம் தேதி நடக்கிறது. மாவட்ட காவல்துறை செய்திக்குறிப்பு: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் 2025ம் ஆண்டிற்கான 1,352 நேரடி காவல் சப் இன்ஸ்பெக்டர் (தாலுகா மற்றும் ஆயுதப்படை) பதவிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு வரும் 21ம் தேதி எழுத்து தேர்வு நடக்கிறது. மாவட்டத்தில் விழுப்புரம் ரங்கசாமி லே அவுட் ராமகிருஷ்ணா வித்யாலயா மிஷன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி (பெண்கள் மட்டும்), விழுப்புரம் திரு.வி.க., சாலை சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, விழுப்புரம் சாலாமேடு அரசு சட்டக்கல்லுாரி, அரசூர் வி.ஆர்.எஸ்., பொறியியல் கல்லுாரி ஆகிய 4 தேர்வு மையங்களில் எழுத்து தேர்வு நடக்கிறது. இதில், ஆண்கள் 5,005, பெண்கள்1,564 என மொத்தம் 6,569 பேர் தேர்வு எழுத உள்ளனர். தேர்வர்கள் காலை 9:30 மணிக்குமேல் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். காலை 10:00 மணி முதல் 12:30 மணி வரை முதன்மை எழுத்து தேர்வு நடக்கும். மாலை 3:30 மணி முதல் 5:10 மணி வரை தமிழ்மொழி தகுதி தேர்வு நடைபெறும். விண்ணப்பதாரர்கள் தேர்வு ஹால் டிக்கெட், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்ற அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு அசல் அடையாள அட்டை மட்டுமே கொண்டு வரவேண்டும். நகல்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. தேர்வாளர்கள் கருப்பு நிற பந்து முனை பேனா மட்டுமே கொண்டுவர வேண்டும். மொபைல் போன், ஸ்மார்ட் வாட்ச், ப்ளூடூத் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை தேர்வு மையத்திற்குள் கொண்டுவர அனுமதி கிடையாது. முதன்மை எழுத்து தேர்வு முடித்தவுடன் தேர்வு மையத்தை விட்டு வெளியே செல்ல அனுமதி கிடையாது. மாலை நடக்கும் தமிழ்மொழி தகுதி தேர்வு முடிந்த பிறகுதான் தேர்வு மையத்தில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். தேர்வர்கள் மதிய உணவு கொண்டுவர அனுமதி உண்டு. தேர்வு மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உணவகத்தில் பணம் மட்டுமே செலுத்தி உணவு மற்றும் தின்பண்டங்கள் பெற்றுக்கொள்ளலாம். ஆன்லைன் பண பரிவர்த் தனைக்கு அனுமதி இல்லை. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ