ஒரே இரவில் 3 இடங்களில் 83 ஆயிரம் திருட்டு
திருவெண்ணெய்நல்லுார்: ஒரே இரவில், மூன்று இடங்களில் திருட்டு நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அணைக்கட்டு சாலை பகுதியில் தனியார் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் இரவு அந்த நிறுவன ஊழியர்கள் பணி முடித்து அலுவலகத்தை பூட்டி சென்றனர். நேற்று அதிகாலை வந்து பார்த்தபோது, அலுவலக முன்பக்க ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது அலுவலகத்தில் வைத்திருந்த 40 ஆயிரம் ரூபாய்; சி.சி.டி.வி., கேமராவில் உள்ள டி.வி.ஆர்., டிவைஸ்கள் திருடு போனது தெரிந்தது. தொடர்ந்து, மைக்ரோ பைனான்ஸ் நிறுவனம் அருகில் உள்ள கீரிமேடு பகுதியை சேர்ந்த குபேந்திரன், 36; என்பவர் நடத்தி வந்த, 'டிரை புரூட்ஸ்' கடையின் பூட்டை உடைத்து 23 ஆயிரம் ரூபாய்; அதே பகுதியில் உள்ள தந்தை பெரியார் நகரை சேர்ந்த வெள்ளையன் மகன் ஐயப்பன், 53; என்பவரது, உரக்கடையின் பூட்டை உடைத்து 20ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றனர். மேலும் அதே பகுதி தங்கம் டிரேடர்ஸ் சிமெண்ட் கடை மற்றும் பிரவீணா ஆட்டோ மொபைல்ஸ் கடை ஷட்டரின் பூட்டுகளும் உடைக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த கடைகளில் பணம் எதுவும் மாயமாகவில்லை. ஒரே இரவில், 3 இடங்களில் 83 ஆயிரம் ரூபாய் திருடு போன சம்பவம், அப்பகுதி மக்களை அச்சமடைய செய்துள்ளது. திருட்டு சம்பவங்கள் குறித்த புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.