வளமிகு வட்டார திட்டத்தில் 87 அரசு பள்ளிகள் தேர்வு
விழுப்புரம்,; தமிழக அரசின் மாநில திட்டமிடல் ஆணையம் சார்பில் வளமிகு வட்டாரங்கள் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் மாநிலம் முழுதும் அரசு தேர்வு செய்துள்ள 50 பின்தங்கிய வட்டாரங்களில் மேல்மலையனுார், திருவெண்ணெய்நல்லுார் இடம் பெற்றுள்ளது.இத்திட்டத்தின் மூலம் பின்தங்கிய வட்டாரங்களில் கல்வி, விளையாட்டு, மின்சாரம், கால்நடை பாதுகாப்பு, சுகாதாரம் உள்ளிட்ட 33 துறைகளின் சேவைகள் கொண்டு வந்து வளர்ச்சி மாவட்டமாக மாற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இத்திட்டத்தின் கீழ் திருவெண்ணெய்நல்லுார் வட்டாரத்தில் 50 அரசு பள்ளிகளில், ஓடி விளையாடு உடற்கல்வி திட்டம் கடந்த ஆண்டு செயல்பட்டது. அதன் தொடர்ச்சியாக, நடப்பு கல்வியாண்டில் ஜூலை முதல் மார்ச் வரை 87 அரசு பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் மூலம் சிலம்பம், யோகா, கபடி, கோ கோ, தடகளம், கேரம், செஸ் ஆகிய பயிற்சிகள் மாணவர்களுக்கு அளிக்கப்படுகிறது.இதற்கான விளையாட்டு உபகரணங்களை அரசு கொடுக்கிறது. மேலும், பயிற்சியாளர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்குகிறது. பள்ளிகளின் வேலை நாட்களில் பயிற்சி அளிக்க அரசு சார்பில் நேர அட்டவணை வழங்கப்பட்டுள்ளது.