கனமழை, வெள்ளத்தில் சிக்கித் தவித்த 900 பேர் மீட்பு: தீயணைப்பு துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு
விழுப்புரம்: விழுப்புரத்தில் புயல், கனமழை பேரிடர் மீட்பு பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரமாக செயல்பட்டு 900 பேரை மீட்டுள்ளதோடு, உயிருக்கு போராடிய 32 பேர், 55 கால்நடைகளை காப்பாற்றியுள்ளனர்.விழுப்புரம் மாவட்டத்தில், பெஞ்சல் புயல் காரணமாக, கடந்த 30ம் தேதி தொடங்கி 3 நாட்கள் பெய்த கனமழை வெள்ளத்திலும், ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்காலும், குடியிருப்புகளில் மழைநீர் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. 15 பேர் இறந்தனர். 450 கால்நடைகள் இறந்தன. பேரிடர் மீட்பு பணியில் தீயணைப்பு துறையினர் பங்களிப்பு அதிகளவில் இருந்தது. கன மழை வெள்ள பேரிடர் மீட்பு பணியில் கடந்த நவம்பர் 30ம் தேதி தொடங்கி டிசம்பர் 5ம் தேதி வரை தொடர்ச்சியாக மீட்பு பணியில் அனைத்து தீயணைப்பு குழுவினரும் தீவிரமாக ஈடுபட்டனர்.இந்த மீட்பு பணியில் விழுப்புரம், திருச்சி, பெரம்பலுார், தஞ்சை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்து வந்த தீயணைப்பு குழுவினர், 5 நாட்களும் முகாமிட்டு பாதிக்கப்பட்ட இடங்களுக்கு விரைந்து சென்று, மீட்பு பணியில் ஈடுபட்டனர்.திருச்சி மண்டல தீயணைப்புத்துறை துணை இயக்குனர் குமார், விழுப்புரம் மாவட்ட அலுவலர் பாஸ்கரன், திருச்சி மாவட்ட அலுவலர் ஜெகதீஷ், உதவி மாவட்ட அலுவலர்கள் ஜமுனாராணி, ஜெயசங்கர், முன்னணி வீரர்கள் ஷாஜகான், ராஜவேலு, பிரபு மற்றும் தீயணைப்பு வீரர்கள் 40 பேரும், வெளிமாவட்ட வீரர்கள் 70 பேரும் பேரிடர் ஏற்பட்ட பகுதிகளில் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.விழுப்புரத்தில் இருந்து 4 தீயணைப்பு வாகனங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து 4 வாகனங்களும், அதிவிரைவு படையைச் சேர்ந்த ஒரு பஸ், கமாண்டோ வீரர்கள் 25 பேரும், விழுப்புரம் வீரர்கள் 40 பேர், வெளி மாவட்ட தீயணைப்பு வீரர்கள் 70 பேர் முகாமிட்டு மீட்பு பணியில் ஈடுபட்டனர்.மேலும், 10 ரப்பர் படகுகள், பவர் கட்டர்கள் 20, பெரிய கயிறுகள், லைப் ஜாக்கெட்டுகள், மிதவை டியூப்கள் என ஏராளமான மீட்டு உபகரணங்களுடன் வந்து, விழுப்புரம், திருவெண்ணைநல்லுார் உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டு, மீட்பு பணியை மேற்கொண்டனர்.குறிப்பாக, விழுப்புரம் அருகே அனிச்சம்பாளையம், பாண்டியன் நகர், பொன் அண்ணாமலை நகர், அரசூர், இருவல்பட்டு, கோலியனுார், குச்சிப்பாளையம், அகரம், முத்தம்பாளையம், கள்ளிப்பட்டு, போன்ற இடங்களில் ஆற்று வெள்ள நீர் மற்றும் ஏரிகள் உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்த இடங்களில் தொடர்ச்சியாக அழைப்புகள் வந்ததால், ஒவ்வொரு குழுவினரும் நேரடியாக சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.பல இடங்களில் வீடுகளில், உயிருக்கு போராடிய 32 பேரை ரப்பர் படகு மூலம் மீட்டனர். பொன்அண்ணாமலை நகரில் 10 பேர், அனிச்சம்பாளையம் 12 பேர், பாண்டியன் நகரில் 12 பேர், கோலியனுாரில் 15 பேர், திருவெண்ணைநல்லுார், அரசூர் பகுதிகளில் 50 பேர் என 900 பேரை படகு மூலமும், கயிறு கட்டியும் மீட்டனர்.மேலும், வெள்ளத்தில் சிக்கிய 55 ஆடு, மாடுகள் மீட்டு ஒப்படைக்கப்பட்டது. தொடர்ச்சியாக 5 நாள்களும் இரவு, பகல் என சுழற்சி முறையில் வீரர்கள் அழைப்பு வந்த இடங்களில் தீவிரமாக செயல்பட்டு மீட்பு பணி மேற்கொண்டது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.